நல்லூர் பிரதேசசபையினால் திருநெல்வேலி நகரிலுள்ள ஒரு பகுதியை அழகுபடுத்தவென முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள திட்டம் சர்ச்சையாகியுள்ளது.
யாழ் மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரியகுளம் அபிவிருத்தி தொடர்பான சர்ச்சைகள் நீடித்து வருகிறது. இந்த நிலையில், மணிவண்ணன் அணியின் கட்டுப்பாட்டிலுள்ள மற்றொரு சபையான நல்லூர் பிரதேசசபையினால் முன்னெடுக்க திட்டமிடப்படும் திட்டத்திலும் சர்ச்சை ஏற்பட்டது.
திருநெல்வேலி சந்தியிலுள்ள சிறிய இடமொன்றை அழகுபடுத்தவென, நல்லூர் பிரதேசசபையினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நல்லூர் பிரதேசசபையினால் 15 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யும் யோசனைக்கு, பிரதேசசபை அங்கீகாரமளித்துள்ளது.
ஆனால், இதில் வெளியில் வராத விடயம்- அந்த திட்டத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அங்கீகாரமளிக்கவில்லை. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆளுகையிலுள்ள பகுதியிலேயே அந்த அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்த இடத்தில் நீர்வீழ்ச்சி போன்ற அமைப்பை உருவாக்கி அழகுபடுத்த 15 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, அபிவிருத்தி நோக்கங்களிற்காக அந்த பகுதியை உடைக்கும் நிலை ஏற்படலாம்.
எனினும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி கிட்டாத விபரம் நல்லூர் பிரதேசசபைக்கு தெரிவிக்கப்படாமலேயே, கட்டுமானத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
நல்லூர் பிரதேசசபையினால் அலங்காரம் செய்யப்படவுள்ள பகுதி, திருநெல்வேலி சந்தியிலுள்ள சிறிய பகுதி. அதற்காக 15 இலட்சம் எதற்கு என்ற கேள்வியும் எழுந்துள்ளது.