பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறு உடைய இலங்கை முஸ்லிம்கள் நற் பெயருடனும், நம்பிக்கையுடனும் கௌரவமாக வாழ்ந்து வந்தவர்கள்; குறிப்பாக 2010ஆம் ஆண்டு யுத்தத்திற்குப் பின்னால் முஸ்லிமல்லாதவர்கள் உடைய இனவாத அரசியலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் உடைய சுயநல அரசியலும், அத்துடன் அவர்களை நம்பி வாக்களித்து வந்த முஸ்லிம்களின் பிழையான தேர்வுகளினால் இன்று முஸ்லிம்கள் இலங்கையில் மிகவும் நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் மௌலவி ஐ.எம்.எம்.மிப்ளால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில்,
முஸ்லிம்களை ஒருபுறம் பயங்கரவாத கண்கொண்டு பார்க்கிறார்கள், இன்னுமொருபுறம் சந்தேகத்துடன் பழகுகிறார்கள், மற்றும் ஒருபுறம் இவர்கள் தாய் நாட்டுக்கு துரோகம் இழைக்கக்கூடியவர்கள் என நினைக்கும் அளவிற்கு செயற்படுகின்றார்கள்; மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் சலுகைகள் வழங்கப்படக் கூடாது, அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு நாட்டிலுள்ளவர்கள் வந்துள்ளதை நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்;
இந்த நிலைமை நீடிக்குமானால் ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக இந்த நாட்டை விட்டு நகர்ந்து கொண்டிருக்கும் செல்வந்தர்களும், புத்திஜீவிகளும் இன்னும் வேகமாக வெளிநாடுகளுக்குச் சென்று தங்களுடைய வசதிகளுக்கு ஏற்ப குடியேறுவார்கள்; அத்துடன் இலங்கையில் ஏழைகளும், படிக்காதவர்களும் மாத்திரமே எஞ்சும் நிலை உருவாகி எதிர்காலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலைமையை விட ஒரு மிகப்பெரிய மோசமான நிலைமை ஏற்படவும் கூடும் இறைவன் பாதுகாக்கவேண்டும்;
இதனை பாதுகாக்க நீண்டகால வேலைத்திட்டம், தலைமைத்துவ சபை போன்றவைகள் உருவாக்கப்பட்டு முஸ்லிம்கள் செயல்படுவதோடு தேர்தல் காலங்களில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்; அதிலும் குறிப்பாக எதிர் வரக்கூடிய மாகாணசபைத் தேர்தல்களில் 07 மாகாணங்களிலும் அரசாங்கம் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம் அத்துடன் வடக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் செல்லும் என்பதும் தெரிந்த விடயமே; என்றாலும் இன்று முஸ்லிம்களுடைய தெரிவு எவ்வாறு இருக்கும் என்பதனை கிழக்கு மாகாணமே முடிவு செய்ய வேண்டும்;
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் கிழக்கு மாகாண ஆட்சி ஒன்று முஸ்லிம்கள் கைவசம் வரவேண்டும் அல்லது அரசாங்கம் (SLPP) இன் பக்கம் செல்ல வேண்டும் என்பதே எமது விருப்பமும், பிரார்த்தனையும், முஸ்லிம்களுக்கு ஆரோக்கியமானதும் ஆகும்; அப்படி இல்லாமல் கிழக்கு மாகாண ஆட்சி இந்தியாவினால், அமெரிக்காவினால் வழிநடத்தப்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைவசமோ அல்லது SJB அதாவது எதிர்க்கட்சியின் பக்கமோ செல்லுமாயின் நிச்சயமாக அதனுடைய பிரதிபலன், நஷ்டங்கள் மற்றும் ஆபத்துக்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்களை மட்டுமன்றி ஏனைய மாவட்டங்களில், மாகாணங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடும்; எனவே இதனைப் புரிந்து கொண்டு அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கூறிக் கொள்வதோடு;
கிழக்குமாகாண முஸ்லிம்களின் தீர்மானத்திலையே எதிர்கால அரசியல் தீர்மானத்தில் 20 லட்ச முஸ்லிம்களின் எதிர்காலமும், நிம்மதியும், அமைதியும் தங்கியுள்ளது என்பதனை மறந்து விட வேண்டாம்; குறிப்பாக : கடந்த 20 வருடங்களாக முஸ்லிம்களை ஏமாற்றி வரும் ரவூப் ஹக்கீம் பின்னால் போய் பிழையான தீர்மானங்களை எடுத்து முட்டாள்கள் ஆகிவிட வேண்டாம்; தற்போது இந்நாட்டில் நம்மவர்களில் யாரும் அறியாத உண்மை என்னவெனில் சாணக்கியன், ஞானசார, மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோர் வெளிப்படையாக வேறுவேறாக இருப்பது போன்று மக்கள் மத்தியில் காண்பித்துக் கொண்டு நிஜத்தில் இரகசியமாக ஒரே அணியாக செயல்படுகின்றார்கள் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.
சாணக்கியன், ஞானசார, ரவூப் ஹக்கீம் மற்றும் சஜித் அணியை வழிநடாத்தும் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் விருப்பங்களுக்கு வாக்களித்து நாம் முற்றாக அழிந்து விடுவதா? அல்லது இருக்கும் அரசாங்கத்தை ஆதரிப்பதா? அல்லது முஸ்லிம்கள் ஒரு கூட்டணியாக ஒன்றிணைந்து கிழக்கு மாகாணத்தை வென்றெடுப்பதா? என்பதை சிந்தித்து முஸ்லிங்கள் எதிர்காலத்தை அமைக்க வேண்டும் என்றார்.