வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோய் தாக்கம் அதிகமாகவுள்ளதால் அவ் இடங்களை தெரிவு செய்து 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த இன்று (04.10) கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் கருத் திட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களின் வழிநடத்தலில் கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு 3 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள 102 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் தலா 3 மில்லியன் ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டு வேலைத் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை கிராம மட்டங்களில் பிரதேச செயலாளர், கிராம அலுவலர் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் இணைந்து திரட்டி வருகின்றோம்.
அதில் எந்தவித பாரபட்சமுமின்றி அந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதேச செயலாளருடன் இணைந்து சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். அதுமட்டுமன்றி அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கான விசேட நிதியும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ளது. அதிலும் தன்னிச்சையான முடிவுகளை எடுக்காது மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி அந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளேன்.
வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோய் தாக்கம் அதிகமாகவுள்ளதால் அவ் இடங்களை தெரிவு செய்து 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வவுனியா வடக்கில் முத்துமாரிநகர் கிராமத்தில் அம் மக்களின் வாழ்வாதரத்திற்காக 135 ஏக்கர் வயல் காணியை விடுவிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்நாட்டியகுளம் கிராமத்தில் 18 குடும்பங்கள் வனஇலாகாவின் பகுதியில் கொட்டில்களை அமைத்து இருப்பதால் தமக்கான குடிநீர், மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற முடியாது இருக்கின்றனர். அவர்களுக்கான தீர்வும் தற்போது பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.