“13வது திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அதிகாரப் பரவலாக்கல் இடம்பெற வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்து இந்தியா பின்வாங்கவில்லை. உடனடியாக தேர்தலை நடத்தி, மாகாணசபை ஆட்சிமுறை அமுல்ப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை இலங்கை அரசுக்கு வழங்குகிறோம். எனினும், 13வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு வேண்டும் என்ற ஒரு விடயத்திலாவது தமிழ் தரப்புக்கள் ஒரே குரலில் வலிறுத்த வேண்டும். இந்த விடயத்தில் தமிழ் தரப்புக்களின் கோரிக்கை அழுத்தமாக இல்லையென்பதே இந்தியாவின் நிலைப்பாடு“- இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிடம் நேரில் தெரிவித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீஹர்ஷ்வர்த்தன் ஷ்ரிங்லா.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீஹர்ஷ்வர்த்தன் ஷ்ரிங்லாவிற்குமிடையிலான சந்திப்பு இன்று (4) மாலை இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. மாலை 6.30 மணியளவில் சந்திப்பை முடித்துக் கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அங்கிருந்து வெளியேறினர்.
இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு முழுவதும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களில்-
“கோட்டாபய அரசு இனப்பிரச்சனை தீர்வு முயற்சிகளிற்கு தயாராக இல்லை. இந்திய- இலங்கை உடன்படிக்கையின் படி அமுல்ப்படுத்தப்பட வேண்டிய 13வது திருத்தத்தை அமுல்ப்பதவும் தயாராக இல்லை. யுத்தத்தின் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் 13 பிளஸ் பற்றி மஹிந்த அரசு பேசியிருந்தாலும், இப்போது தலைகீழாக செயற்படுகிறது.
மாகாணசபை தேர்தல்களை பிற்போட்டு, ஆளுனர்களின் ஆட்சியை தொடர்ந்து, மாகாணசபை ஆட்சி முறையை வலுவிழக்க செய்யும் நோக்கத்துடனேயே செயற்படுகிறார்கள். மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டுமென ஆளும்தரப்பு மாகாணசபை உறுப்பினர்களிடமிருந்து எழும் கோரிக்கையை சமாளிக்க, வரவு செலவு திட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாகாணசபை தேர்தல்களை மேலும் பின்தள்ளும் நோக்கத்துடனேயே அரசாங்கம் செயற்படுகிறது.
தமிழ் மக்களின் நியாயமான அரசியல் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனில், ஆகக்குறைந்தது 13 பிளஸ் ஆவது அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்-
“13வது திருதத்தத்தின் அடிப்படையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை. மாகாணசபை முறைமையை செயலிழக்க செய்யும் இரகசிய நிகழ்ச்சி நிரலில் அரசு செயற்பட முனைவதும் இந்தியாவிற்கு தெரியும். அதனாலேயே மாகாணசபை தேர்தலை ஒத்திவைத்துக் கொண்டிருக்கிறது.
மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதற்கு இந்தியா மட்டும் அழுத்தம் கொடுப்பது போதாது. தமிழ் தரப்புக்களின் குரலும் வலுவாக ஒலிக்க வேண்டும். 13வது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாணசபை முறைமையை அமுல்ப்படுத்த வேண்டுமென தமிழ் தரப்புக்கள் வலுவாக, ஓரே குரலில் கூற வேண்டும். இப்போது தமிழ் தரப்புக்களில் இருந்து வரும் குரலின் அழுத்தம் போதாதென இந்தியா கருதுகிறது.
தமிழ் தரப்புக்களிடம் எத்தனை அணிகள் இருந்தாலும், குறைந்த பட்சம் இந்த விடயத்திலாவது, ஒரே குரலில் பேச வேண்டுமென இந்தியா கருதுகிறது.
13வது திருத்தத்தைஅமுல்ப்படுத்தும்படி இலங்கை மீது நாம் அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பங்களில், 13வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வை தமிழ் தரப்புக்கள் அதிகம் வலியுறுத்துவதில்லையென்றும், தேர்தல் சட்டத் திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையாக உள்ளதாகவும் அரச தரப்பில் கூறப்பட்டு வருகிறது“ என தெரிவித்தார்.
எனினும், இந்த விடயத்தில் கோட்டாபய ராஜபக்ச அரசு பொய்யுரைக்கிறது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விலாவாரியாக விளக்கியது.
13வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வை தமிழ் தரப்புக்களில் பெரும்பாலானவர்கள் வலியுறுத்துவதாகவும், கூட்டமைப்பு அதை தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், தேர்தல் திருத்தத்திற்கு சாதாரண பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றினாலே போதும் என்ற விடயத்தையும் கூட்டமைப்பினர் தெளிவுபடுத்தினர்.
அத்துடன், வடக்கு கிழக்கில் அபிவிருத்தி திட்டங்களில் இந்தியா தொடர்ந்து முதலிட வேண்டுமென்றும் கூட்டமைப்பு கோரியது.
ஏற்கனவே இந்திய அபிவிருத்திகள் வடக்கு, கிழக்கில் அதிகளவில் நடப்பதை சுட்டிக்காட்டிய இந்திய வெளிவிவகார செயலாளர், அது எதிர்காலத்திலும் தொடரும் என உத்தரவாதமளித்தார்.
இதன்போது, கூட்டமைப்பின் சார்பில் முக்கிய கருத்தொன்று கூட்டிக்காட்டப்பட்டது-
“வடக்கு, கிழக்கு பகுதிகள் சீன கொலனியாக மாறுவத நாம் விரும்பவில்லை. இந்தியா அதை அனுமதிக்கக்கூடாது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.