இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க உள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளர் இன்று வெளியுறவு அமைச்சர், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புக்களையும் சந்திக்க உள்ளார்.
அவர் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் ஒரு கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார். இன்று காலைய யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுகிறார். அதேவேளை, நெல்லியடி மத்திய மகளிர் கல்லூரியின் கட்டிட திறப்பு விழாவில் இன்று காலை இணைய வழியில் கலந்து கொள்வார்.
நேற்று பலாலி விமான நிலையத்தையும் பார்வையிட்டார். கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையுடன் தொடர்புடைய அதிகாரிகள் பலாலி விமான நிலையத்தின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து இந்திய வெளியுறவு செயலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்திய மானியங்களுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தையும் அவர் பார்வையிட்டார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாட்டை வந்தடைந்த இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா நாளை பிற்பகல் நாட்டை விட்டு வெளியேற உள்ளார்.