26.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இந்தியா

இயேசுவை காட்டிக் கொடுத்து யூதாஸ் பெற்ற நாணயம்… திப்பு சுல்தானின் கிரீடம்: மெகா ஏமாற்றுக்காரன் சிக்கினார்!

ஒரே சம்பவத்தால் ஒட்டுமொத்த மலையாளிகளும் உச்சரிக்கும் பெயர் ஆகிவிட்டார் மோன்சன் மாவுங்கல். நூதனமுறையில் இவர் நடத்திய மோசடிகளும், சினிமா ப்ரியரான இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். தன்னம்பிக்கை பேச்சாளர், ஆயுர்வேத மருத்துவர், தொல்லியல் பொருட்கள் சேகரிப்பாளர், தெலுங்கு நடிகர் என பல தளங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர். சேர்த்தலா, எர்ணாகுளத்தில் இவருக்கு பிரம்மாண்ட இல்லமும் இருக்கிறது. இந்த இல்லத்தில் பழம்பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகமும் வைத்துள்ளார். இதனை மையமாக வைத்தே மிகப்பெரிய மோசடிகளை அரங்கேற்றி வந்திருக்கிறார் மாவுங்கல்.

புருனே சுல்தானின் கிரீடத்தை தான் விற்றதாகவும், அதில் வெளிநாட்டில் இருந்து 70 ஆயிரம் கோடி பணம் வர உள்ளதாகவும் மோசடியில் ஈடுபட்டார். அந்தப் பணத்திற்கு அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால்தான் தன் கணக்கிற்கு பணம்வரும் என ஷாஜி என்பவர் உள்பட பலரிடமும் ரூ.10 கோடி மோசடி செய்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இப்போது சிறையில் இருக்கிறார் மோன்சன் மாவுங்கல். ஆனால் இந்த நூதன மோசடியை அவர் அரங்கேற்றிய விதமே அவரைக் கேரளாவின் பேசுபொருள் ஆக்கியுள்ளது.

இதுகுறித்து இவ்வழக்கை விசாரித்து வரும் காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மோன்சன் மாவுங்கல் திப்பு சுல்தானின் கிரீடம் முதல், இயேசு போட்டிருந்த ஆடை வரை தன்னிடம் இருப்பதாகக் கூறி பலரை நம்ப வைத்திருக்கிறார். அடிப்படையில் அவருக்கு பேச்சுத்திறமையும் இருந்ததால் மக்கள் நம்பும்படி சொல்லியிருக்கிறார். இயேசுவை காட்டிக் கொடுத்ததற்காக யூதாஸ் பெற்ற நாணயங்களில் இரண்டு, உலகில் முதலில் அச்சடிக்கப்பட்ட பைபிள், சதாம் உசேன் பயன்படுத்திய திருக்குரான், முகமது நபி பயன்படுத்திய கின்னம், திருவிதாங்கூர் மன்னரின் சிம்மாசனம் என அவர் கதைகட்டி காட்டிய பொருட்களை சமூகவலைதளங்களில் பார்த்து பிரம்மித்துவிட்டு விஐபிக்களே அவரது இல்லத்துக்கு பயணப்பட்டனர்.

கேரள காவல் துறையின் முன்னாள் இயக்குநர் லோக்நாத் பெகாராவும் மாவுங்கலை நம்பி அவர் அருங்காட்சியகத்துக்கு சென்றுள்ளார். அங்கு லோக்நாத் பெகாரா ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்துகொள்ள, பக்கத்தில் உதவி இயக்குநர் மனோஜ் ஆப்ரகாம் வாளைப்பிடித்துக்கொண்டு கம்பீரமாக புகைப்படம் எடுத்துள்ளனர். அதிகாரிகள் மட்டுமல்லாது, கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் தொடங்கி, நடிகர் மோகன்லால் வரை இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளனர். அதையெல்லாம் புகைப்படமாக எடுத்து தனது அருங்காட்சியகத்திலேயே வைத்த மாவுங்கல், தன்னை நம்பவைக்க அதைப் பயன்படுத்திக்கொண்டார்.

ரஜினியின் பாட்ஷா திரைப்படம் மாவுங்கலுக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல் தன்னையும் ஒரு நிழல் உலக தாதாவாக கருதிக்கொண்டு நாயுடன் புகைப்படம், மொட்டை மாடியில் இருந்து பின்னால் பத்துபேருடன் நடந்து வருவது போல் புகைப்படம் என பதிவிட்டு அந்தத்தளத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். தெலுங்கில் சில படங்களிலும் நடித்துள்ளார். உலக அமைதி கவுன்சில் உறுப்பினர், கேரளர்களின் சர்வதேச சங்கம் எனப் பல அமைப்புகளிலும் முக்கிய பொறுப்பில் இருந்திருக்கிறார். பிரமுகர்களோடு தொடர்பு இருந்ததால் அவர் மீது எந்த வழக்கும் பதியாமல் பார்த்துக்கொண்டார்” என்றனர்.

அரசியல் புள்ளிக்கு தொடர்பா?

இதனிடையே மோன்சன் மாவுங்கல் விவகாரத்தில் அரசியல்வாதிகளின் பிண்ணனியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து, 2020 நவம்பர் வரையிலான காலத்தில் தான் கிரீடம் விற்ற பணம் வருவதாகச் சொல்லி பத்து கோடி ஏமாற்றியிருக்கிறர் மாவுங்கல். இதில் கடந்த 2018 நவம்பரில் வெளிநாட்டுப் பணம் வங்கிக் கணக்கில் வருவதில் டெல்லியில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதாகக் கூறி இப்போதைய கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் வாக்கு கொடுத்ததால்தான் ரூ.25 லட்சம் பணம் கொடுத்ததாக பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியுள்ளார். தனக்கு மாவுங்கலை தெரியும் என சொல்லியிருக்கும் சுதாகரன், நிதிப் பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதேபோல் பல்வேறு அரசியல் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் என பலரும் கேரளாவில் மோன்சன் மாவுங்கலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என அறிக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

முன்னாள் மாநில காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹ்ரா, கூடுதல் போலீஸ் தலைவர் மனோஜ் ஆபிரகாம், மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிஜி தாம்சன் உள்ளிட்டோர் இந்த விசாரணையில் சிக்கலை சந்திக்கக்கூடும்.

குற்றப்பிரிவு விசாரணையில் மோன்சன் மாவுங்கலு முற்றிலும் உடைந்து, கதறியழுததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததால் அவரிடம் பணம் இல்லை என்றும் தனது செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய தொகை தேவை என்றும் இதனால் மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.

ஒரு தொடர்புடைய வளர்ச்சியில் ஒரு இத்தாலிய குடியேறிய மலையாளப் பெண்ணின் பெயரும் வெளிப்பட்டது மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவுங்களுடனான அவரது தொடர்புகள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கின.

இதேவேளை, அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வாகனங்களில் ஒன்று பாலிவுட் நடிகை கரினா கபூரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதலைக்காக சொத்தை விற்றவர் வஉசி; சொத்துக்காக திருமணம் செய்தவர் பெரியார் – சீமான் ஆவேசம்

Pagetamil

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் குழுவின் தலைவன் கைது!

Pagetamil

திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அசத்தல் சாதனை

east tamil

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

Leave a Comment