24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

சிறுவர்களை தொலைத்த நாம் எப்படி சிறுவர் தினத்தை கொண்டாட முடியும்?

எமது சிறுவர்கள் பலர் காணாமல் போயுள்ளனர். எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் நாங்கள் எவ்வாறு சிறுவர் தினத்தை கொண்டாட முடியும்?. குறித்த சிறுவர்கள் பெற்றோருடன் ஓமந்தையை தாண்டி வந்த நிலையில் காணாமல் போயுள்ளனர் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை(1) காலை 11.30 மணியளவில் மன்னாரில் ஊடக சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுக்கு பின் உள்ள புகைப்படங்களில் காணப்படுகின்ற சிறுவர்கள் அனைவரும் தாய் தந்தையுடன் வருகை தந்து இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச சிறுவர் தினத்தை இன்றைய தினம் எத்தனையோ இடங்களில் மகிழ்வாக அனுஷ்டிக்கின்றனர்.ஆனால் தமிழர்களாகிய நாங்கள் சிறுவர் தினத்தை இன்றைய தினம் துக்க தினமாக அனுஸ்ரிக்கின்றோம்.

எமது சிறுவர்கள் பலர் காணாமல் போயுள்ளனர்.எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் நாங்கள் எவ்வாறு சிறுவர் தினத்தை கொண்டாட முடியும்?.குறித்த சிறுவர்கள் தாய் தந்தையுடன் ஓமந்தையை தாண்டி வந்தவர்கள்.அவர்கள் காணாமல் போயுள்ளனர்.

துணியில் சுற்றிக் கொண்டு வந்த சிறுவர் ஒருவர் கூட காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.அந்த குழந்தைக்கு என்ன தெரியும்? கூட்டிக்கொண்டு போன குழந்தை மற்றும் பெற்றோர் இன்று உயிருடன் உள்ளார்களா? இல்லையா? என்பது கூட தெரியாது.இந்த நிலையில் சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஸ்ரிக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள்,உறவுகளும் கிடைக்கும் வரை எந்த தினமாக இருந்தாலும் துக்க தினமாகவே அனுஸ்ரிப்போம்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் மரணச்சான்றுதல் வழங்க அவர் யார்?

தற்போதைய ஜனாதிபதி அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார்.அவர் கூறியே இத்தனை பிள்ளைகளையும் பிடித்துள்ளனர்.அவரை நம்பியே வெள்ளைக் கொடியுடன் இத்தனை பிள்ளைகளையும் அனுப்பி உள்ளனர்.

அனுப்பி வைத்த பிள்ளைகளை நீங்கள் பிடித்து வைத்துக் கொண்டுள்ள நிலையில் எமது பிள்ளைகளையும்,உறவுகளையும் தேடி வீதிகளில் நாங்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதாகவும்,நஷ்ட ஈடு தருவதாகவும் கூறுகின்றனர்.

மரணச்சான்றுதல் மற்றும் நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ளவா ? நாங்கள் இத்தனை காலம் வீதியில் போராடினோம்.?.

ஜனாதிபதி ஒன்றை யோசிக்க வேண்டும். தனது வீட்டில் இவ்வாறு ஒரு சம்பவம் இடம் பெற்றிருந்தால் நாங்கள் மரணச்சான்றுதல் மற்றும் நஷ்ட ஈடு வழங்குவதாக தெரிவித்தால் அவர் அதை ஏற்றுக் கொள்வாரா?.

அவர் அதனை ஏற்றுக்கொள்வாராக இருந்தால் நாங்களும் அதை ஏற்றுக் கொள்கிறோம்.மரணச்சான்றிதலை பெற்றுக்கொள்ள அவரிடம் நாங்கள் கையேந்த வேண்டிய தேவை இல்லை.

அதனை எடுக்க வேண்டிய முறைகள் எமக்கு தெரியும்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய எமது போராட்டம் சர்வதேச நாடுகளுக்கே தெரியும்.

எமது பிள்ளைகளை மீட்க நாம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளுக்கு தெரியும்.இந்த நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் ஜனாதிபதி கதைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதலில் பிள்ளைகளையும்,உறவுகளையும் காணாது தேடி அலையும் உறவுகளாகிய எங்களுடன் கதையுங்கள்.நாங்கள் பிச்சை கேட்கவில்லை.உயிரோடு தந்த எமது பிள்ளைகளையே திருப்பி கேட்கின்றோம்.

உயிரிழந்த பிள்ளைகளுக்காக நாங்கள் போராடவில்லை.உயிருடன் உங்களிடம் ஒப்படைத்த பிள்ளைகளை கேட்டு போராடுகின்றோம்.

எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.பிள்ளைகள் உயிருடன் இருக்கிறதா? இல்லையா என்பது ஜனாதிபதிக்கு தெரியும்.பிள்ளைகள் இறந்திருந்தால் எங்கே இறந்தது?எப்படி இறந்தது என்பதை தெரிவியுங்கள்.அதன் பின்னர் மரணச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதா,இல்லையா ? என்று தீர்மானிப்போம்.

உலக நாடுகளை ஏமாற்றுவது போல் எங்களையும் ஏமாற்ற வேண்டாம்.என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு

east tamil

பண்டாரகமவில் பழ வியாபாரியிடம் 150,000 ரூபா கொள்ளை

east tamil

மாணவியுடன் ஆபாச காணொளிகள் பகிர்ந்த பாடசாலை ஆசிரியை கைது

east tamil

கைதிகளை விடுவிக்கக் கோரி கையெழுத்து போராட்டம்

Pagetamil

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் கருத்தறியும் கூட்டம்

Pagetamil

Leave a Comment