வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு இன்று (22) காலை இடம்பெறவுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராக பதவிவகித்த கோ.கருணாணந்தராசா அண்மையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய தவிசாளர் தெரிவு அண்மையில் இடம்பெற்ற போதும், போதிய உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருக்காததால், இன்று வரை தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தவிசாளராக சதீஷ் போட்டியிடுவார். சுயேட்சை சார்பில் செல்வேந்திரா களமிறங்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
நெருக்கமான போட்டியாகவே இது அமையும்.
வல்வெட்டித்துறை நகரசபையில் 17 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 7 உறுப்பினர்கள் உள்ளனர். சுயேட்சைக்குழுவின் 4 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலை கூட்டணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) 1 உறுப்பினரும், ஈ.பி.டி.பி 2 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி 1 உறுப்பினரும் அங்கம் வகிக்கிறார்கள்.
வல்வெட்டித்துறை நகரசபையில் ரெலோவிற்கே அதிக ஆசனம் உள்ளது. அங்கு தவிசாளரை ரெலோவே நியமிக்கிறது. இம்முறை சதீஷையும் ரெலோவே தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வல்வெட்டித்துறைக்கு வந்த ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.
இதன்போது, ரெலோ தலைமையால் அளிக்கப்பட்ட விளக்கத்தில், சதீஸ் 3 மாதங்கள் தவிசாளராக செயற்படுவார் என்றும், பின்னர் பதவிவிலகி, தமிழ் தேசிய கட்சியின் சிவஞானசுந்தரம் தவிசாளராக வழிவிடுவார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டால், இதன்பின் தற்போதைய உபதலைவர் கேசவனையும் நியமிக்கப்படுவதாக கூறப்பட்டது.
எனினும், இதில் கேசவன் திருப்தியடையில்லை. அந்த கலந்துரையாடலின் இறுதியில் கூட்டத்திலிருந்து வெளியேறி சென்றுள்ளார்.
சதீஷ் முன்னர் ரெலோவின் உறுப்பினர். பின்னர் அவரை கட்சியை விட்டு நீக்குவதாக, தமிழ் அரசு கட்சியின் செயலாளரால் கடிதம் அனுப்பப்பட்டு, அது தொடர்பான நீதிமன்ற வழக்கில் அவர் வெற்றியடைந்தார். இந்த சர்ச்சைகளிற்குள்ளும் அவர் ரெலோ தரப்புடன் நெருக்கமாக செயற்பட்டுள்ளார். இதனால், இப்பொழுது மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தவிசாளராக களமிறங்குகிறார்.
கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களில், தவிசாளர் பதவிக்கு தற்போதைய உபதவிசாளர் கேசவனும் விருப்பப்படுகிறார். தனக்கு தவிசாளர் பதவி கிடைக்காத பட்சத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டேன் என கூறுகிறார். அவரை சமரசப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. அவரும் வாக்களித்தால் கூட்டமைப்பின் 7 வாக்குகளும், ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பின் ஒரு வாக்கும் சதீசுக்கு கிடைக்கும்.
சுயேட்சை வேட்பாளருக்கு தமது 4 வாக்குகளுடன், ஈ.பி.டி.பி, சு.கவின் ஆதரவு கிடைக்கக்கூடும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 வாக்குகள்தான் தீர்மானிக்கும் வாக்குகளாக இருக்கும்.