வெலிக்கடை மற்றும் அனுர்தாபுரா சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்கள் குறித்து குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவங்களை நேரில் பார்த்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் அறிக்கைகள் உள்ளிட்ட ஆதாரங்களை சிஐடி சேகரித்து வருவதாக அவர் கூறினார்.
“நியாயமான விசாரணை நடத்தப்படுவதையும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதையும் நாங்கள் உறுதி செய்வோம்” என்று அவர் உறுதியளித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வெளிநாட்டு பயணத்திலிருந்து நாடு திரும்புவதற்காக காத்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் கட்சி செயலாளர் சாகர காரியவசம் கூறினார்.
“இந்த வகையான நடவடிக்கை எந்த நாகரிக சமுதாயத்திலும் அனுமதிக்கப்பட முடியாதது. விசாரணைகளுக்குப் பிறகு பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து மட்டும் விலகிய ரத்வத்த, மாணிக்கம் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சராக நீடிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆளும் கூட்டணியின் மற்ற அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களிள் வலியுறுத்தி வருகிறார்கள்.
நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி கூறுகையில், அரசாங்கம் முழு போலீஸ் அறிக்கைக்காக காத்திருக்கிறது என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் கைதிகளை பாதுகாக்கும் குழு ஆகியவை சிஐடியிடம் புகார் அளித்துள்ளன.
செப்டம்பர் 12 அன்று இரவு அனுராதபுரம் சிறைக்குள் நுழைந்த லொஹான் ரத்வத்தை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டள்ள கைதிகளில் எட்டு பேரை அழைத்து அவர்களில் இருவரை துப்பாக்கியை நீட்டி மிரட்டியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த மத்தியரசன் சுலக்சன், ஹட்டனை சேர்ந்த கணேசன் தர்ஷன் ஆகியோரே மிரட்டப்பட்டதாக அடையாளம் காணப்பட்டனர்.