சிறைச்சாலைகளின் வளர்ச்சிக்காக சிறைச்சாலைகள் அமைச்சராக நிறைய பணிகளை ஆற்றியுள்ளேன். அப்படி செயற்பட்ட நான், முட்டாள்தனமான செயலைச் செய்வேன் என நம்புகிறீர்களா என அப்பாவியாக கேட்கிறார் முன்னாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த.
தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் குறிப்பிடப்படும் எந்த சம்பவமும் நடக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
“சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற முறையில், எந்தச் சிறையிலும் எந்த நேரத்திலும் செல்ல எனக்கு யாரிடமும் அனுமதி தேவையில்லை. என்னிடம் 29 சிறைச்சாலைகள் மற்றும் 2 மறுவாழ்வு மையங்கள் இருந்தன. அங்கு நான் பகல் அல்லது இரவு எந்த நேரத்திலும் செல்லலாம்.
நான் யாரிடமும் சொல்லாமல் போகிறேன். ஏனென்றால் இவற்றில் என்ன நடக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் சிறை அமைப்பை முழுமையாக மாற்றினேன். போதை மருந்து விநியோகம் நிறுத்தப்பட்டது. சிறைக் கும்பல்களிடையே நடந்த கொலைகள் நிறுத்தப்பட்டன. நான் அத்தகைய நபர்களை ஒரு தனியான இடத்திற்கு மாற்றினேன். பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றைச் சொல்ல முடியாது. செல்போன்கள் மற்றும் பிற பொருட்கள் சிறைக்குள் கொண்டு வருவது நிறுத்தப்பட்டது.
எனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன். அந்த வார இறுதியில் நான் அனுராதபுரம் சிறைச்சாலைக்கும், மற்ற சிறைச்சாலைகளுக்கும் சென்றேன்.
நான் அத்துமீறி சிறைக்குள் நுழையவில்லை. நான் எந்த கைதியையும் மிரட்டவில்லை. வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணைக்கு மாற்ற எனக்கு யோசனை இருந்தது. கைதிகளை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான அனைத்துத் வசதிகளையும் கொண்ட சிறைச்சாலையாக மாற்ற விரும்பினேன். சிறைகளில் இப்படி ஒரு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த முயலும் நான் இவ்வளவு முட்டாள்தனமான காரியத்தைச் செய்திருப்பேன் என்று நினைக்கிறீர்களா?
நான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற போதிலும், தூக்கு மேடையை பார்க்க யாரையும் அழைத்து செல்லவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றேன். ஆனால் அங்கு எந்த கைதிகளையும் தொடவில்லை. குற்றச்சாட்டுக்களில் சொல்லப்படுவதை போல அப்படி எதுவும் நடக்கவில்லை. இதுபற்றிய உண்மையை ஜனாதிபதியும் பிரதமரும் புரிந்துகொள்வார்கள். நான் மாணிக்கம் மற்றும் நகை தொழில்துறை இராஜாங்க அமைச்சராக நீடிப்பேன்“ என்றார்.



