புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பது சுமந்திரனின் கருத்து. எங்களையும் அதற்குள் இழுத்து தான் தப்பிக்க முயற்சிக்கிறார். அது அவரது குணம். பிறந்ததிலிருந்து அபரிடமுள்ள ஒரு குணம் அது. அதிலிருந்து அவரை மீட்க முடியாது. எம் தொடர்பாக அவர் கூறுபவற்றைபெரிதுபடுத்த வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
முறையான விசாரணை நடத்தப்பட்டால் புலிகளிற்குள் ஊடுருவியிருந்த அரச படைகளே போர்க்குற்றத்தில் ஈடுபட்டமை உறுதியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று (15) அவர் நடத்திய மெய்நிகர் ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை நிரூபிக்கலாமென நாம் சுட்டிக்காட்டி வருகிறோம்.
விக்கிலீக்ஸ் தகவல்களின்படி, போர் முடிவதற்கு பல மாதங்களின் முன்னரே அமெரிக்க தூதரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய, புலிகளிற்குள் ஊடுருவி விட்டதாகவும், இந்த இடத்திலிருந்து புலிகள் தப்பிப்பது கடினம் என்றும் சொல்லியுள்ளார்.
யுத்தம் முடிந்த பின்னர் நாம் தெளிவாக ஒரு விடயத்தை குறிப்பிட்டுள்ளோம். புலிகளை பலவீனப்படுத்த ஊடுருவியர்களே, புலிகளின் பெயரில் அந்த குற்றங்களை செய்திருக்க வாய்ப்பிருந்ததாக தெரிவித்திருந்தோம்.
உண்மையான தமிழீழ விடுதலைப் புலிகள் எந்தவொரு போர்க்குற்றத்திலும் ஈடுபடவில்லை, உண்மையான விசாரணையொன்று நடத்தினால் விடுதலைப் புலிகளினதையும், தமிழ் இனத்தினதையும் நற்பெயரை உறுதி செய்யலாமென்பதையே குறிப்பிட்டு வருகிறோம்.
கட்த வரவுசெலவு திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான விவாதத்தில் நான் உரையாற்றிய போது, அரசாங்கத்தின் குற்றங்களை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்த போது, பின்னாலிருந்த சுரேன் ராகவன் “நீங்கள் ஒரு தரப்பை மாத்திரமே சொல்லுகிறீர்கள். இரண்டு தரப்பையும் விசாரிக்க வேண்டும். நீங்கள் தயாரா““ என பின்னாலிருந்து கத்தினார்.
அப்பொழுது சொன்னேன், நாங்கள் அந்த விசாரணைக்கு பயப்பிடவில்லை. உண்மையான விசாரணை நடத்தால் தமிழர்கள் தரப்பில் ஒரு பிழையும் நடக்கவில்லையென்பதை நாம் உறுதிப்படுத்தலாம், உண்மை தெரிய வந்தால்- அதன் பின்னணிகள் தெரிய வந்தால்- சிறிலங்காவின் ஊடுருவலை உறுதிப்படுத்தலாம்.
அதைவிட, விடுதலைப் புலிகள் என சொன்னவர்களை எந்த விசாரணையுமில்லாமல் நீங்கள் கொலை செய்து விட்டீர்களே. பிறகென்ன விசாரணை?
இன்று விசாரிக்கப்பட வேண்டியவர்கள் கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள புளொட் அமைப்புத்தான் விசாரிக்கப்பட வேண்டும். அவர்களிற்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
விடுதலைப் புலிகள் பிழை விட்டார்கள், அவர்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் நாம் குறிப்பிடவில்லை. புலிகள் எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லையென்பதை நிரூபிக்கலாமென சவால் விட்டே அதனை நாம் குறிப்பிட்டோம்.
புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பது சுமந்திரனின் கருத்து. எங்களையும் அதற்குள் இழுத்து தான் தப்பிக்க முயற்சிக்கிறார். அது அவரது குணம். பிறந்ததிலிருந்து அபரிடமுள்ள ஒரு குணம் அது. அதிலிருந்து அவரை மீட்க முடியாது. எம் தொடர்பாக அவர் கூறுபவற்றைபெரிதுபடுத்த வேண்டியதில்லை என்றார்.