25.3 C
Jaffna
February 2, 2023
கட்டுரை முக்கியச் செய்திகள்

உதய சூரியன் அஸ்தமித்து 21 ஆண்டுகள் கடந்தது!

முஸ்லிங்களால் மட்டுமின்றி இலங்கையர்களினால் சிறந்த தலைவராக கொண்டாடப்படும் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் பச்சை வயல் நிறைந்த மலை முகடுகள் பரந்த மிகப்பெரிய கிராமமான சம்மாந்துறையில் முஹம்மது மீரா லெப்பை ஹுஸைன் மற்றும் மதீனா உம்மா அவர்களுக்கு மூத்த புதல்வனாக கல்முனையில் பிரபலமான காரியப்பர் குடும்பத்தில் பிறந்தார். கல்முனைக்குடி அல்-அஷ்கர் வித்தியாலயத்தில் தனது கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்த அஸ்ரப், சட்டக் கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலேயே இலங்கை அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டார். அதனாலயே அஷ்ரப் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார். தந்தை செல்வ நாயகத்தை தனது அரசியல் குருவாக அஷ்ரப் வகுத்துக் கொண்டார்.

அரசியலையும், சமூகத்தையும், சட்டக்கல்வியையும் காதலித்த அதே அளவுக்கு காதலித்த பேரியல் இஸ்மாயிலுடன் தனது இல்லற வாழ்வை 1977 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். காதலின் அடையாளமான அமான் அஸ்ரப் எனும் ஒற்றை புதல்வருக்கு சிறந்த தந்தையாகவும் அவர் வாழ்ந்து மறைந்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் நீண்ட வரலாறு கொண்டவர்கள் இலங்கையின் பூர்வீக குடிகள் ஆரம்ப காலம் தொட்டு அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் மூவின மக்கள் வாழும் இந்த நாட்டில் அரசியல் பொருளாதார, கலை, கலாச்சார விடயங்களின் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது சுதந்திர போராட்டத்தின் போது பிரித்தானியர்கள் மூவின மக்களையும் பிரித்து சுதந்திர போராட்டத்தை பலவீனப்படுத்த எடுத்த முயற்சியினால் மூவின மக்களின் உறவு பிளவுபட்டது பின்னர் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற உணர்வு அந்தந்த மக்களிடையே மேலோங்கி இருந்தது. சிங்களவர்களுக்கு 2 தேசிய கட்சிகளும் தமிழர்களுக்கு தமிழரசு கட்சி என்றும் தோற்றம் பெற்றது. ஆனாலும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனிக்கட்சி இல்லாமலே காலம் கடந்து சென்றது முஸ்லிம்கள் பிற இனத்துவ கட்சிகளின் மூலமாக தங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தனர். ஆனால் அவர்களால் அந்த கட்சியின் தலைமைத்துவத்தை தாண்டி முஸ்லிம்களின் உரிமைகளை பேசக் கூடியதாக இருக்கவில்லை அதுவரை முஸ்லிம் மத்தியில் அரசியல் கட்சி இல்லாததால் அவர்கள் பல பின்னடைவுகளை எதிர் நோக்கி வந்தனர் என்பதை வரலாறு தெளிவாக முன்வைக்கிறது.

இலங்கை அரசியல் மீதும், முஸ்லிம் சமூகத்தின் மீதும் பற்றுக்கொண்ட எம்.எச்.எம். அஷ்ரப் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளில் தீவிர பங்கு கொண்டு முஸ்லிம் சமூகத்தைப் பற்றி அதிகமாக சிந்திக்கத் தொடங்கினார். சிறுபான்மைச் சமூகம் தனித்துவங்களை அடையாளப்படுத்தி தனது உரிமைகளுக்காக போராடாதவரை அந்த சமூகங்கள் கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலையை அவர் மிகத்தெளிவாக அறிந்தார். 1977 ஆண்டு முஸ்லிம் சமுதாயத்தையும் காயப்படுத்தி முஸ்லிம்களுக்கென்று ஓர் அரசியல் கட்சி தேவை என்பதை வலியுறுத்தும் சம்பவம் புத்தளத்தில் நடந்தது புத்தளம் ஜூம்ஆ பள்ளியில் தொழுது கொண்டிருந்த மக்கள் மீது பொலிசாரால் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் முஸ்லிங்கள் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அப்போது ஆட்சியில் இருந்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சுதந்திர கட்சியில் எந்த ஒரு முஸ்லிம் பிரதிநிதியாலும் பாராளுமன்றத்தில் அது பற்றி வாய் திறந்து பேச முடியவில்லை எதிர்கட்சியில் இருந்த ஏ.சி.எஸ்.ஹமீத் பேச முயன்ற போது அவரது கட்சியின் தலைமையும் அதனை தடுத்தது. இந்த விடயம் முஸ்லிம்களை பொறுத்த வகையிலே மிகவும் ஒரு கவலைக்குரிய விடயமாக இருந்தது .

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரம் முளைத்தது

தனது சிறுவயது முதலே முஸ்லிம்களுக்கென்று தனி இயக்கம் வேண்டும் என்று சிந்தித்த இளைஞன் அஸ்ரப் 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடியில் முதலாவது மு.கா ஸ்தாபக கூட்டத்தை நடத்தினார். இலங்கை  வரலாற்றில் 1980 ஆண்டு மிகவும் கொந்தளிப்பாக சிங்கள பேரினவாத சக்திகள் சிறுபான்மையினர் மீது பாரிய வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட சம்பவங்கள் நடந்து ஏறியது தமிழ் தேசிய வாதம் இளைஞர்களின் கைகளுக்கு சென்று பல ஆயுத போராட்ட இயக்கங்கள் தோன்றின. முஸ்லிம் இளைஞர்களும் அந்த இயக்கங்களில் தம்மை இணைத்து கொண்டனர். ஆனாலும் அங்கே அவர்கள் தமது அடையாளங்களுடன் இருப்பது சாத்தியமற்று போகவே தமிழ் முஸ்லிம் உறவில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டது. கிழக்கில் வியாபித்த 83 கலவரத்தின் போது தலைவர் அஷ்ரப் இன் கல்முனை வீடு ஆயுததாரிகளினால் தீக்கிரையாக்கப்பட்டது.  இலங்கை முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியை கனவு கண்ட அவர் அகதியாக கொழும்புக்கு இடம் பெயர்ந்தார் அங்கே அவர் தனது சட்டப் பரீட்சை தொடர்ந்து கொண்டு அவரது இலட்சிய பாதையில் பயணித்தார். கிழக்கு மாகாண முஸ்லிம்களது பிரச்சினைகளை தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்வதில் முனைப்புடன் செயற்பட்ட அஷ்ரப் அவர்களை கிழக்கு மாகாண மஸ்ஜிதுகள் சம்மேளனம் தமது பிரச்சினைகளை அரசிடம் எடுத்து செல்வதற்கு ஆற்றல் மிக்கவராக இனம் கண்டது. எம்.எச். எம். அஷ்ரப் தனது இளமைக்காலத்தில் இருந்தே தமிழரசுக்கட்சியில் இளைஞர் பேரவையில் இருந்தவர் என்றபடியால் தமிழரசுக்கட்சியின் தலைவர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்தார் அவர்களிடம் முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசினாலும் அவர்கள் எப்படியும் தனித்துவமான இனமாகக் காணப்படுகிறனர் என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார். 1986 இல் அண்ணன் அமிர்தலிங்கத்துடனான இரவு இரண்டு மணி வரை நீடித்த வாக்குவாத்தின் பின்னர் அன்றிரவே முஸ்லிம் காங்கிரஸை ஓர் அரசியல் கட்சியாக பிரகனப்படுத்த வேண்டும் என்று முடிவுக்கு அஷ்ரப் வந்தார் மேலும் அன்றிரவே சக தோழர்களிடம் பைஅத்தும் (உறுதிமொழி) செய்து கொண்டார் அந்த செய்தியை விடிந்ததும் தினகரன் பத்திரிகையின் தலைப்பு செய்தியாக வரச் செய்தார்.

1987 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சி மன்ற தோர்தலில் போட்டி இடுவதற்கு முடிவு எடுத்தார் அத்தேர்தலை தமிழ் இயக்கங்கள் பகிஷ்கரித்திருந்தனர். விடுதலைப் புலிகள் அத் தேர்தலை தடை செய்தனர். அதையும் கேட்காமல் முஸ்லிம் காங்கிரஸ் களத்தில் இறங்கியது சில இடங்களில் தேர்தல் பணிகளையும் மேற்கொண்டு சென்று கொண்ட பொழுது முஸ்லிம் காங்கிரஸ் அனைவருக்கும் பதிவுத்தபாலில் விடுதலைப் புலிகளினால் கடிதம் அனுப்பப்பட்டது. ஓகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன்னால் நீங்கள் வாபஸ் வாங்கா விட்டால் என்ன விலை கொடுத்தாயினும் உங்கள் உயிரை நாங்கள் கைப்பற்றுவோம். முஸ்லிம் காங்கிரஸ் அந்த நேரத்தில் மரண அச்சுறுத்தலையும் தாண்டி போட்டியிட தீர்மானித்தனர். அந்த முடிவே முஸ்லிம் காங்கிரஸின் உறுதியையும் அதன் பாதையையும் அடையாளம் காட்டியது. அத்தருணம் முதலே முஸ்லிம் காங்கிரஸை மக்கள் மனங்களில் ஏந்தத் தொடங்கினர். தமிழர்கள் இந்த செயற்பாட்டை பேரின வாத சக்திகளின் தூண்டுதலால் இடம் பெறுகிறதா? என்ற சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர். இத்தேர்தல் பிரசாரத்தின் போது சந்தாங்கேணி மைதாணத்தில் நடந்த கூட்டத்தில் அஷ்ரப் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானது. நாங்கள் யாருக்கும் அஞ்சாதவர்கள அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் அஞ்சுகின்றவர்கள் என்றார். ஆனால் அந்த சமயத்தில் நடந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக அந்த தேர்தல் இடம்பெறவில்லை என்பது வேறுகதை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் நிறைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன் முதலாக பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசியல் பிரவேசம் செய்தது. எதிர்பார்த்ததற்கு மேலாக வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கினார்கள். அக்கால கட்டத்தில் ஜே.ஆர். ஜயவர்தனவின் பதவிக் காலம் முடிவு பெற்று பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான முஸ்தீபுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்தன அடுத்த ஜனாதிபதியாக போட்டி இடுவதற்குத் தயாராக இருந்த ஆர்.பிரேமதாஸாவுடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மேற்கொண்ட உடன் படிக்கையின் மூலமாக பாராளுமன்றத்தின் கடைசி அமர்வில் தேர்தல் வெட்டுப் புள்ளியை 12.5 இலிருந்து 5 விழுக்காடாக குறைத்து சிறுபான்மை மக்களினது பாராளுமன்ற பிரதிநிதித்துவங் களின் எண்ணிக்கையை நியாயமான முறையில் பெற்றுக் கொள்ள அடித்தளமிட்டனர்.

உத்வேகத்துடன் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன் முதலாக போட்டியிட்டு அந்தத் தேர்தலில் நான்கு இடங்களைக் கைப்பற்றியது. தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், இளம் வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஏ. அபூபக்கர், என்.எம். புகார்தீன் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள். இந்த பிரவேசித்ததன் மூலம் முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியின் வெற்றிடம் நிரப்பப்பட்டது. 1980 ஆம் ஆண்டு மாகாண சபை கூட்டத் தொடரின் கடைசி நாளன்று நடந்த ஈழப் பிரகடனத்தை முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் எதிர்த்தனர். ஆனாலும் தமிழர்களின் போராட்டத்தின் நியாயங்களை உணர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் தமிழர்களுக்காக இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தும் அம்சங்களையும் கூறினர்.

1994 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான வாக்கு பலம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அமைந்தது அந்த சந்தர்ப்பத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது சந்திரிக்கா குமாரதுங்கவின் கட்சிக்கு ஆதரவு வழங்குவதென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்து நிபந்தனைகளுடனான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. முஸ்லிம் மாகாண சபை, இனப் பிரச்சினைக்கான பேச்சு வார்த்தைகளின் போது தனித்தரப்பாக முஸ்லிம் காங்கிரஸ் உள்வாங்கப்படல், முஸ்லிம்களுக்கான கரையோர மாவட்டம் போன்ற விடயங்களை அவர் ஒப்பந்தம் உள்ளடக்கியிருந்தது வரலாற்றில் முதன் முறையாக சிங்களத் தலைமைத்துவமொன்று முஸ்லிம்களின் வலுப்பாட்டை கொள்கை ரீதியாக ஏற்று எழுத்து மூலமாக கைச்சாத்திட்ட நிகழ்வு இதுவாகும். முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பயணத்தில் இது ஒரு முக்கிய படியாகும் ஆட்சியில் பங்கு கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு முக்கிய அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டது அந்த அதிகாரத்தின் மூலம் மக்களுக்கு எவ்வளவு சேவை செய்யலாம் என்பதற்கு அஷ்ரப் உதாரணப் புருஷராக விளங்கினார். பாரிய அபிவிருத்தி திட்டமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுக அதிகார சபை, வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு புணர் வாழ்வு அளித்தமை போன்ற எண்ணிலடங்கா செயற்பாடுகளாகும்.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு நாட்டுக்கு புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை வரைவதில் அஷ்ரப் மிகத் தீவிரமாக உழைத்திருந்தார். பலவகையான அரசியல் வியூகங்களை அமைப்பதில் திறமையாக இருந்த அஸ்ரப், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அதன் பெறுபேறாகத் தான் பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் பெரும் பொறுப்பு அவருக்குக் கிட்டியது. சுமார் 3 மணித்தியாலங்களாக அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் பலத்த கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் உரையாற்றிய உரை இலங்கை அரசியல் வரலாற்றில் நினைவு கூரப்படும் சிறப்புக்குரியதாகும். அரசியல் என்பது அஷ்ரப் அவர்களின் வாழ்வில் ஒரு சிறு பகுதி மட்டுமே. அதற்கு அப்பால் அஷ்ரப் பல்துறை சார்ந்த ஆளுமையே அவரை ஒரு மகா புருஷராக எம்முடன் நடமாட வைத்துள்ளது. அஷ்ரப் அவர்களின் பேச்சுத் திறனும் தர்க்கிக்கும் ஆற்றலும், விவாதத் திறனும் மெய்மறக்கச் செய்யும் வல்லமை கொண்டவை. என்கின்றனர் அரசியல் ஆராய்ச்சியாளர்கள்.

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் வாழ்க்கை ஓட்டத்தை அணுகி ஆராய்வோர் அவரிடம் தனித்திறமையான ஒரு ஆற்றல் பரிணமிப்பதை ஏற்றுக் கொள்வார்கள். அந்த வகையில் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் ஒரு வாழ்க்கைத் தத்துவமாக நிற்கின்றார்.  அதனால் தான் அவரால் மரணத்தை நோக்கி சிந்திக்க முடிந்தது. மரணத்தோடும் அவரால் போராட முடிந்தது, அவரால் மரணத்தை நோக்கி அறைகூவல் விடுக்கவும், மானுடத்தை நோக்கி நேசக்கரம் நீட்டவும் முடிந்தது. நான் எனும் நீ கவிதைத் தொகுப்பை தந்த கவிஞர் அஸ்ரப் சிறந்த இலக்கிய ஆளுமையாகவும் தன்னை நிலை நிறுத்தினார். புதிய வெளிச்சங்கள் எனும் பாடல் தொகுப்பு உணர்ச்சி பொங்கும் வரிகளினால் உணர்வு நிரம்பிய ஒன்றாகவே இன்றும் உள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அஸ்ரபுக்கு பின்னரான தலைமைத்துவ நடவடிக்கைகளில் எழும் மிகப்பெரிய முரண்பாடுகளையும், அதிருப்திகளையும் தேர்தல் காலங்களில் மறக்கடிக்கச் செய்யும் ஆற்றல் தலைவர் அஷ்ரபின் கவிவரிகளில் உருவான புதிய வெளிச்சங்கள் எனும் பாடல் தொகுப்பு இறுவெட்டுக்களுக்கு உள்ளது என்றால் மிகையாகாது. தலைவர் அஷ்ரபின் கவி வரிகளில் உருவான புதிய வெளிச்சங்கள் எனும் பாடல் தொகுப்பு இறுவெட்டுக்களை தடை செய்தால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கில் மிகப்பெரிய சரிவை காணலாம். அந்தளவிற்கு கிழக்கு முஸ்லிங்களை பற்றி ஆராய்ந்து அறிந்து வைத்திருந்தார் மறைந்த முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரப்.

முஸ்லிம்களின் முடிசூடா மன்னனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காவிய நாயகனுமான மொஹமட் ஹூசைன் முஹமட் அஷ்ரப்பின் மறைவின் 21 ஆவது ஆண்டுப் பூர்த்தி செப்டம்பர் 16, 2021 அன்றான இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை 1986 இல் உரிய வகையில் பொறுப்பேற்ற பின்னர், சட்டத்தரணி எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸிற்கு புதிய தொலைநோக்கையும், புதிய பாதையையும் கொடுத்தார். 15 வருடங்களாக மறைந்த அஷ்ரப் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் அவரின் இலட்சிய வீறும், சாதிக்கும் ஆற்றலும் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்பல சாதனைகளைக் கண்டது. இவரது வசீகரம், அரசியல் நிலைமைகளை சரியாக கணக்குப் போடும் திறன், அர்ப்பணிப்பு, ஒரு தலைவருக்குரிய உரிய பண்பு ஆகியவற்றின் காரணமாகவே பல காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த கிழக்கு முஸ்லிம்களை, தனித்து இயங்கக் கூடிய ஒரு சக்தியாக உருவாக்க இவரால் முடிந்தது என்கின்றனர் இவர்காலத்தில் இவரை  உற்றுநோக்கியவர்கள்.

வெடித்து சிதறிய முஸ்லிங்களின் அரசியல் கனவு !

21 ஆண்டுகளுக்கு முன்னர் அன்று ஒருநாள் 16 ஆம் திகதி சனிக்கிழமை (16.09.2000) அன்று இலங்கைக்கு மிகப் பெரும் துயரத்தைக் கொண்ட நாளாக விடியும் என்று எவருமே அன்று தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் போது நினைத்திருக்க மாட்டார்கள். அன்று காலை 9.05 மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்திலிருந்து இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று கிழக்கு நோக்கிப் பறந்து சென்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், தேசிய ஐக்கிய முன்னணியின் ஸ்தாபகரும், ஜனாதிபதி சட்டத்தரணியும், கப்பல் துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சருமான எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் அன்று காலை அம்பாறை, இறக்காமத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக மேலும் 14 பேருடன் அந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

கொழும்பிலிருந்து 110 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள அரநாயக்கப் பகுதியில் இருக்கும் “பைபில் றொக்” (Bibil Rock) மலைப்பகுதியின் மேலாக அந்த ஹெலிகொப்டர் பறந்து கொண்டிருந்த போது திடீர் விபத்துக்குள்ளானது. பலத்த வெடியோசையுடன் தீப்பிழம்பாக வானத்தில் வெடித்துச் சிதறியது. அமைச்சரும் அவருடன் பயணம் செய்த மேலும் 14 பேரும் அந்த விபத்தின் போது அந்த இடத்திலேயே உயிரிழந்தார்கள். ஹெலிகொப்டர் சிதைவுகளுக்கு மத்தியிலிருந்து கருகிய நிலையிலான சடலங்கள் மீட்கப்பட்டன. அமைச்சர் அஷ்ரபின் ஜனாஸாவை சப்ரகமுவ மாகாண சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க அடையாளம் காட்டினார்.

அமைச்சர் அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி மரணமானார் என்ற செய்தி கிழக்கு மாகாணத்தை எட்டிய போது அரசியல் பேதங்கள் மறந்து மக்கள் வாய்விட்டுக் கதறினார்கள். சோகம் தாழாமல் தாய்மார் தலையில் அடித்துப் புலம்பினார்கள்.

அமைச்சரை வரவேற்பதற்காக மாபெரும் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண வீதியெங்கும் துயரவெள்ளம் கரைபுரண்டது. வரலாறு காணாத சோகத்தில் கிழக்கு மாகாணம் மூழ்கிப் போனது. தனது சொந்த சகோதரனை அல்லது தான் 10 மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை இழந்த துயரத்தில் தாய்மார்கள் தலையில் அடித்துக்கொண்டு கதறியழுதார்கள். கிழக்கு மாகாண மக்கள் செயலிழந்து நடைப்பிணமாக நின்றார்கள். கூடவே மின்சாரமும் தடைப்பட்டிருந்த நாள் அது. அந்த காட்சியை காணாதவர்கள் இலங்கை தாய்நாடு சுனாமியன்று எப்படி இருந்தது என்பதை கண்டு கொண்டால் போதுமானது.

விமான வெடிப்பு, விபத்தா அல்லது நாச வேலையா என ஆராய புலனாய்வுகள் தொடங்கப்பட்டன. அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் சதி வேலைகள் பற்றி பலவிதமான கருத்துகள் அடிபட்டன. புலனாய்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. புலனாய்வின் முடிவு எப்படி இருந்தாலும், தலைவர் அஷ்ரப்பின் மரணம் இதுவரை நிரப்பப்படாத வெற்றிடத்தை முஸ்லிம் அரசியலில் உருவாக்கிவிட்டது. அவர் அரசியலில் கால்பதித்து மு.கா தலைவராக உதயமாகி புறாவின் ஸ்தாபகரான காலம் வரை நீண்டு மரணிக்கும் வரையிலும், இவர் முஸ்லிம்களின் ஒரேயொரு தேசியத் தலைவராக இருந்தார்.

அன்னாருக்கு இறைவன் உயர்ந்த ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதி கிடைக்கவும், அவருடைய கப்று சுவனபதியால் விசாலமாக்கப்படவும் எல்லாம் வல்ல இறைவனிடம் நாம் பிரார்த்திப்போம். இருந்தாலும்  2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் துயர் கொண்ட ஒரு நாளாகும் “இந்த மையத்தை குளிப்பாட்டுவதில் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் தண்ணீரும் தேவையில்லை பண்ணீரும் தேவையில்லை தூக்கி விரைவில் எடுத்து தொழுது விட்டு அடக்குங்கள் கண்ணீர் அஞ்சலிகள் போதும் கவலைகளை மறந்து தூக்குங்கள் எனது பணி இனி முடிந்தது உங்கள் பணிகளை செய்வதற்காய் புறப்படுங்கள்” எனும் அவரது கூற்றுப்படியே மக்கள் வெள்ளம் புடைசூழ கப்ரை நோக்கி பயணித்தார்.

நூருல் ஹுதா உமர்
மாளிகைக்காடு

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கட்சிக்குள் பிளவேற்படுத்தும் உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: மாவை சேனாதிராசா

Pagetamil

13வது திருத்தத்தை நிறைவேற்றவே கூடாது: பிரதான பௌத்த பீடங்கள் ரணிலுக்கு கடிதம்!

Pagetamil

‘விரைவில் ஐ.எம்.எப் உதவி… ஜனாதிபதி தேர்தல்… புதிய அரசியலமைப்பு’; அமெரிக்க ஸ்கிரிப்ட் இதுதான்: விக்டோரியா நுலாண்ட்- சிறுபான்மையின கட்சிகள் சந்திப்பின் முழு விபரம்!

Pagetamil

13வது திருத்தத்தையும், ஒற்றையாட்சியையும் வெளிப்படையாக நிராகரிக்காவிட்டால் பல்கலைகழக மாணவர் பேரணிக்கு ஆதரவில்லை: தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

Pagetamil

உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 இடங்களை இழந்த அதானி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!