தமிழில் பாபநாசம், ஜில்லா, தர்பார் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். நிவேதா தாமஸ் சமீபத்தில் ஒரு மாட்டு பண்ணைக்கு நேரடியாக சென்று அங்குள்ள மாட்டில் பால் கறந்து காப்பி போட்டு குடித்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் நிவேதா தாமஸை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஒரு விலங்குகள் நல ஆர்வலர் கூறும்போது, “நிவேதா இப்படி மாட்டில் பால் கறப்பதற்கு பதில் சங்கிலியால் பூட்டப்பட்டு உள்ள மிருகங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாம். ஒரு பெண்ணான அவர் இன்னொரு இனத்தை சேர்ந்த பெண்ணை துன்புறுத்துவது மோசமானது” என்று கூறியுள்ளார்.
இன்னொரு சமூக ஆர்வலர் கூறும்போது, “காலநிலை மாற்றத்துக்கு பால் பண்ணைகளும், மாட்டிறைச்சி துறையுமே காரணமாக உள்ளன. இவை மனிதர்கள் சாப்பிட தகுந்தது இல்லை. நிவேதா இறைச்சி உண்பதையும், பால்பண்ணையையும் கவர்ச்சியாக்கி இருக்கிறார்” என்று சாடியுள்ளார்.