24.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா அடுத்த மாதம்: சுகாதாரப் பகுதியினர் அனுமதி தராவிட்டால் நிகழ்நிலையில் நடத்த ஏற்பாடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம், 08 ஆம், 09 ஆந் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. நாட்டில் இப்போதுள்ள கொரோனா – தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைகள் நீடிக்குமாயின், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதனை நிகழ்நிலையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், தற்போதைய நிலமைகள் வழமைக்குத் திரும்பிய பின்னர் பிறிதொரு நாளில் சம்பிரதாய பூர்வ பட்டமளிப்பு விழாவை நடாத்தி மாணவர்களுக்குப் பதக்கங்களைப் பெற்றோர் முன்னிலையில் அணிவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களின் ஊடாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க் கிழமை காலை, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்றது. இந்த ஊடகச் சந்திப்பின் போது பட்டமளிக்கு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் மேற்கொண்ட ஊடக விபரிப்பின் போதே இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இந்த ஊடகச் சந்திப்பின் போது பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன், பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர், பட்டமளிப்பு விழா நிகழ்வு முகாமைத்துவ தலைவரும், தொழில் நுட்ப பீடாதிபதியுமான பேராசிரியர் திருமதி சிவமதி சிவச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஊடகச் சந்திப்பின் போது வெளியிடப்பட்ட ஊடக விபரிப்பின் முழு விபரமும் வருமாறு:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – இலங்கை
35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா – பகுதி II
07, 08, 09 ஒக்ரோபர் 2021

எல்லாம் வல்ல பார்வதி சமேத பரமேஸ்வரனின் அருளுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம், 08 ஆம், 09 ஆந் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவை செப்ரெம்பர் மாதம் 16,17,18 ஆம் திகதிகளில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் தற்போது நிலவும் கொரோனாப் பெருந்தொற்றுச் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு திட்டமிட்ட படி நடாத்த முடியாமையினால் ஒக்ரோபர் மாதம் 07,08,09 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விஞ்ஞான பீடம், விவசாய பீடம், வணிக முகாமைத்துவ பீடம், மருத்துவ பீடம், மற்றும் வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியா பல்கலைக்கழகத்தை) ச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரிப் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் 210 பட்டப்பின் தகைமை பெற்றவர் களுக்கும், 1, 455 உள்வாரி மாணவர்களுக்கும், 62 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 210 பேர் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை ஒருவரும், முது தத்துவமாணி பட்டத்தை 08 பேரும், சைவ சித்தாந்தத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தை 26 பேரும், சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை 14 பேரும், கல்வி முதுமாணிப் பட்டத்தை 101 பேரும், வியாபாரா நிருவாக முதுமாணிப் பட்டத்தை 47 பேரும், முகாமைத்துவத்தில் பட்டப் பின் டிப்ளோமா தகைமையை 02 பேரும், நூலக மற்றும் தகவல் விஞ்ஞான பட்டப் பின் டிப்ளோமா தகைமையை 11 பேரும் பெறவிருக்கின்றனர்.

உள்வாரியாக, மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 131 பேர் மருத்துவமாணி, சத்திர சிகிச்சை மாணி பட்டத்தையும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 173 பேர் விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தையும் பெறவுள்ளனர்.

இவர்களுடன் கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணி பட்டத்தை 302 பேரும், விசேட கலைமாணிப் பட்டத்தை 02 பேரும், பொதுக் கலைமாணி பட்டத்தை 04 பேரும், மொழிபெயர்ப்புக் கற்கையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 15 பேரும், நுண்கலைமாணி (நடனம் – பரதம் ) பட்டத்தை 63 பேரும், சட்டமாணிப் பட்டத்தை 52 பேரும் பெறவிருக்கின்றனர்.

அத்துடன், வணிக முகாமைத்துவ பீடத்தில் இருந்து வியாபார நிருவாக மாணி (சிறப்பு) பட்டத்தை 246 பேரும், வியாபார நிருவாக மாணிப் பட்டத்தை 08 பேரும், வியாபார நிருவாக மாணி (பொது) பட்டத்தை 12 பேரும், வணிகமாணி (சிறப்பு) பட்டத்தை 65 பேரும், வணிகமாணி (பொது) பட்டத்தை 05 பேரும், வணிகமாணி பட்டத்தை 02 பேரும் பெறவிருக்கின்றனர்.

விவசாய பீடத்தைச் சேர்ந்த 65 பேர் விவசாய விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 55 பேர் பொறியியல் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தையும் பெறவுள்ளனர்.

வவுனியா பல்கலைக் கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 27 பேர் தகவல், தொடர்பாடல் தொழில் நுட்ப விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தையும், 06 பேர் சுற்றுச்சூழலியல் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், 06 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், 41 பேர் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தையும், 23 பேர் கணினி மற்றும் பிரயோக கணிதத்தில் விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தையும், 13 பேர் சுற்றுச்சூழலியல் விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தையும் பெறவிருக்கின்றனர். மேலும், வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 34 பேர் திட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும், 80 பேர் வியாபார முகாமைத்துவமாணி (சிறப்பு) பட்டத்தையும், 25 பேர் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தையும் பெறவுள்ளனர்.

இவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தைச் சேர்ந்த 62 பேரின் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டங்களும் உறுதிப்படுத்தப்படவுள்ளன.
நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் : அறிவுறுத்தல்கள் கட்டாயமாகப் பின்பற்றப்படும். பட்டமளிப்பு விழா அரங்குக்கு வெளியிலும், சுகாதார நடைமுறைகளைப் பின் பற்றுவதோடு, இயலுமானவரை தேவையற்ற முறையில் கூட்டம் கூடுவதைத் தவிர்த்து – சமூக இடைவெளியைப் பேணுவதன் மூலம் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு பெறுவதற்கு பல்கலைக்கழக சமூகம் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றது.
நிகழ்நிலை பட்டமளிப்பு / Virtual Convocation
நாட்டில் இப்போதுள்ள கொரோனா – தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைகள் நீடிக்குமாயின் மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் பட்டங்களை உறுதிப்படுத்துவதற்காகப் பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் ( Virtual   ) நடாத்துவதெனவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • பட்டமளிப்பு விழாவை நேரடியாக – மாணவர்களின் பெற்றோர் முன்னிலையில் வழமை போன்று நடாத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
  • அனுமதி கிடைக்கும் பட்சத்தில் வழமை போன்று பட்டமளிப்பு விழா இடம்பெறும். இவ்வருடம் பெப்ருவரி மாதம் இடம்பெற்ற  பகுதி ஒன்றைப் போன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடாத்துவதற்கு அனுமதிக்கப்படுமாயின், பட்டம் மாணவர்களுடன் மாத்திரம் சுகாதார நடைமறைகள் பின்பற்றப்பட்டு பட்டமளிப்பு விழா இடம்பெறும். பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுகின்ற மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு விநயமாகக் கேட்டு கொள்கின்றோம். மாணவர்கள் தவிர்ந்த வேறெவரும் விழா மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  •  சுகாதாரத் துறையினரின் அனுமதி கிடைக்காதவிடத்து நிகழ்நிலைப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்ரோபர் 07 ஆம் திகதி கைலாசபதி கலையரங்கில் இடம்பெறும். நிகழ்நிலை நிகழ்வுகள் அனைத்தும் எமது பல்கலைக்கழகத்தின் இணையத்தளம் வாயிலாகவும், முகப் புத்தகம், யூ ரியூப் சனல்களின் ஊடாகவும் நேரலையாக ஒளி பரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சம்பிரதாய பூர்வ பட்டமளிப்பு  /  Ceremonal Convocation 

  • மாணவர்களுக்குப் பட்டங்களை உறுதிப்படுத்துவதற்காகவே பட்டமளிப்பு விழா நிகழ்நிலையில் நடாத்தப்படுகிறது.
  • தற்போதைய நிலமைகள் வழமைக்குத் திரும்பிய பின்னர் பிறிதொரு நாளில் சம்பிரதாய பூர்வ பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அன்றைய நாளில் மாணவர்களுக்கு சம்பிரதாய பூர்வமாக வழமையான ஏற்பாடுகளுடன் பெற்றோர் முன்னிலையில் பதக்கம்  அணிவிக்கப்படும்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் தற்கொலை

east tamil

Leave a Comment