இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் உள்ளிட்ட பல விவகாரங்களில் கவலை வெளியிட்டுள்ளார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷெல் பச்செலெட் அம்மையார்.
இன்று ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையில், வாய்மொழி புதுப்பிப்புக்களை சமர்ப்பித்த போது இந்த கவலைகளை எழுப்பினார்.
மனித உரிமைகள் பேரவையின் தலைவர், பிஜியின் தூதர் நஜாத் ஷமீம் கான், 48 வது அமர்வை இன்று தொடங்கி வைத்தார்.
பேச்லெட் பின்னர் இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை வழங்கினார்.
இலங்கையில் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை மற்றும் சிவில் நிர்வாகக்கட்டமைப்புக்கள் தொடர்ச்சியாக இராணுவமயப்படுத்தப்பட்டு வருகின்றமை ஆகியவை தொடர்பில் இதன்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவசகால சட்டத்தின் மூலம், இராணுவத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாமென அச்சம் வெளியிட்டார்.
கல்வியியலாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், காணாமல்போனோரின் குடும்பங்கள், ஊடகவியலாளர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் போன்றோரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகள் பெரிதும் கவலையளிப்பதாகவும் அவதானத்திற்குரியவை என்றும் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தடைச்சட்டம் உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் இதன்போது வலியுறுத்திய ஆணையாளர் மிச்சேல் பச்லெட், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞர் அஹ்னாப் ஜசீம் ஆகியோர் அச்சட்டத்தின் கீழ் விசாரணைகளின்றி நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அதிருப்தியை வெளியிட்டார். பயங்கரவாத தடைச்சட்டம் மீளாய்வுக்குட்படுத்தப்படும் கால ஒழுங்கை வலியுறுத்தினார்.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“தண்டனை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியின் சமீபத்திய மன்னிப்பு சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி செயல்முறையின் மீதான நம்பிக்கையை சிதைக்கும் அபாயமும் உள்ளது.
பல அடையாள மனித உரிமை வழக்குகளில் நீதித்துறை நடவடிக்கைகளின் புதிய நிலைப்பாடுகளால் நான் கவலைப்படுகிறேன். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 பேர் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மீது குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவும் இதில் அடங்கும்.
பொலிஸ் காவலில் இறப்புகள் மற்றும் போதைப்பொருள் குற்றக் குழுக்களின் பொலிஸ் என்கவுண்டர்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளின் தொடர்ச்சியான சித்திரவதைகள் மற்றும் மோசமான நடத்தைகள் குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்“என்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணையை வலியுறுத்தியதுடன், தண்டனை முடியும் தறுவாயிலிருந்த 16 தமிழ் அரசியல் கைதிகளே அண்மையில் விடுதலையானார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினர்.
நாளை (செவ்வாய்க்கிழமை) பொது விவாதத்தின் போது பல நாடுகள் இலங்கை மீதான தனது கவலையை எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.