ஷங்கர் பக்கமே போகமாட்டேன் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் வடிவேலு தெரிவித்தார்.
வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சுராஜ் – வடிவேலு இணையும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (10) நடைபெற்றது. இதில் வடிவேலு பேசி முடித்தவுடன், பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவை பின்வருமாறு:
நாய் சேகர் கதாபாத்திரம் கடைசியில் த்ரிஷா அல்லது நயன்தாரா என்றுதான் முடியும். இந்தப் படத்தில் உங்களுடன் நயன்தாரா நடிக்கிறாரா?
அப்படி ஒன்றுமில்லையே. அப்படி எதுவும் தகவல் வந்துள்ளதா?. இந்தக் கதையில் எனக்கு நாயகி எல்லாம் கிடையாது. கதையில் ஒரு நாயகியாக அவர் இருப்பார்.
10 ஆண்டுகளாக நிறையப் பேர் உங்களை நடிக்கவிடாமல் கேட் போட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
நான் சொன்ன காமெடிதான். எனக்கு என்டே கிடையாது. வேறு என்ன சொல்வது. 10 ஆண்டுகளில் 5,6 படங்களில் நடித்தேன். அதில் கூட சமாளித்தேன். இடைப்பட்ட காலத்தில் கால் வைத்த இடமெல்லாம் கண்ணி வெடியாக வைத்தார்கள். தப்பித்துவிட்டேன்.
நீங்கள் கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி என்கிறீர்கள். அவர்கள் உங்கள் மீது படப்பிடிப்புக்கு வருவதில்லை. பெரிய இழப்பு என்றெல்லாம் சொல்கிறார்களே?
அது முழுவதுமே பொய். 100 கோடி ரூபாய் கூட இழப்பு என்பார்கள். எனக்காக லண்டனிலிருந்து சுபாஷ்கரன் வந்து பேசி இந்தப் படத்தை அவர் எடுத்துக்கொண்டார்.
ஷங்கருடன் மீண்டும் இணைவீர்களா?
ஆத்தாடி அந்த ஏரியா பக்கமே போகமாட்டேன். அந்த சாவகாசமே நமக்கு வேண்டாம் ஐயா.
இம்சை அரசன் மாதிரியான படங்களில் மீண்டும் நடிப்பீர்களா?
அந்த மாதிரி நடிக்க வாய்ப்பில்லை. அதற்கு பதிலாகத்தான் இந்தப் படம் பண்றேன். இனிமேல் ஹிஸ்டாரிக்கல் படமே பண்ணமாட்டேன்.