Pagetamil
முக்கியச் செய்திகள்

கையொப்பமிட்டு கடிதம் தயாரித்தது உண்மை; ஆனால் அனுப்பவில்லை: சிறிதரன் எம்.பி விளக்கம்! (VIDEO)

இலங்கை தமிழ் அரசு கட்சியின் 9 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை ஐ.நாவிற்கு அனுப்ப தயாரித்தது உண்மை. ஆனால், அதை நாம் அனுப்பவில்லையென விளக்கமளித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் இருந்து இரண்டாவது கடிதம் அனுப்பப்பட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தமிழ்பக்கம் முதலில் செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கான கையொப்பங்கள் பெறப்பட்டதையடுத்து, அந்த ஆவணத்தை நேற்று தமிழ்பக்கம் வெளியிட்டது.

அப்படியொரு நடவடிக்கையே நடக்கவில்லையென சில தரப்புக்கள் அடித்து சொன்னதுடன், கையொப்பமிட்டவர்கள் அதை மறுத்ததாகவும் செய்தி வெளியிட்டன.

இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய எம்.ஏ.சுமந்திரன், கையெழுத்திட்ட பலர் தாம் கையெழுத்திடவில்லையென மறுத்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்துவது குற்றவியல் நடவடிக்கை, இந்த விடயத்தில் சட்டநடவடிக்கையெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று கிளிநொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கடிதம் தயாரிக்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது உண்மை. எனினும், அதை அனுப்பவில்லையென விளக்கமளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேன் கடிதமொன்று அனுப்பியிருந்தார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பை அனுப்புமாறு கேட்டேன். கூகிள் ட்ரான்சிலேட் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பை அனுப்பியிருந்தார். அதில் நாம் கையொப்பமிடவில்லை. அந்த கடிதம் அனுப்புவது குறித்து கட்சிகளிற்குள் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

இந்த மாதம் 3ஆம் திகதி சுமந்திரனால் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் இரு தரப்பும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எமக்கு உடன்பாடில்லை. அது பற்றி நாங்கள் ஆராயவேண்டும். காரணம்  ஒரு தரப்பு களத்தில் இல்லை. மற்றைய தரப்பான அரசு இந்த நாட்டினுடைய இறைமையுள்ள அரசை நடத்துகின்ற ஒரு அரசாங்கம் தன் குடிமக்கள் மீது போர் குற்றத்தை நடத்தியுள்ளது. குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்திருக்கிறது. பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் மக்களை அழைத்து அதற்குள் குண்டு போட்டுக்கொலை செய்துள்ளது. ஒரு இன அழிப்பு.

அது பற்றி கடந்த திங்கட்கிழமை ஆராயலாம் என தீர்மானித்த நிலையில், கட்சியின் உயர்மட்டகுழுவின் இணைய வழி கலந்துரையாடல் கடந்த திங்கள்கிழமை நடந்தது.

இதைபற்றி ஆராய்ந்த போது, “ஐயா ஒரு தனி ஆளாக கையொப்பமிட்டு அனுப்பி விட்டார்“ என்றார். கடிதம் அனுப்பி விட்ட பின்னர் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

அவர் அதனை அனுப்பியிருந்தால் நாங்கள் எதனையும் செய்ய முடியாது. காரணம் அவர் சிங்கக் கொடியை பிடித்து விட்டு காளியின் கொடி என்று சொல்லுவார். மக்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள். அவர் பாராளுமன்றத்தில் புலிகள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை. மனித உரிமை மீறல்களை மதிக்கவில்லை. அதனால் அவர்கள் அழிந்தார்கள் என்று பேசுவார். அதையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது.

அவர் கடிதத்தை அனுப்பி விட்டு, இரண்டு பேரையும்தான் விசாரிக்க வேண்டுமென்றால், மக்கள் ஏற்றுக்கொண்டு பேசாமல் இருப்பார்கள். இதுதான் இன்றைய காலசூழல்.

அவர் எங்களை கேட்கவில்லை. அவரது கடிதத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கூட்டமைப்பின் தலைவர் என அவர் அனுப்பியதை யாரும் கேள்விகேட்க முடியாது. அந்த சூம் சந்திப்பில், கடிதம் அனுப்பப்பட்டு விட்டதாகவே சுமந்திரன் தெரிவித்தார். அதற்கு பின்னர் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அதில் எமது கருத்து பெறவில்லை.

நான், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மேயர் உள்ளிட்டவர்கள் ஒரு கடிதத்தை தயாரித்திருந்தோம். ஆனால் அந்த கடிதம் அனுப்பப்படவில்லை. அதற்குரிய இணைப்பை நான் தான் செய்தேன். இலத்திரனியல் முறைப்படிதான் கையொப்பத்தையும் பெற்றோம்.

கடந்த 19ஆம் திகதிக்கு முன்னர் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டியது, 7ஆம் திகதிக்கு பின்னர் அனுப்புவதில் பயனில்லையென்பதால் அதை கைவிட்டோம்.

நாம் இந்த கடிதத்தை அனுப்பவுமில்லை. வெளியிடவுமில்லை. இதில் ஒரு சில காரணங்களை கருதி, முரண்பாடுகள் அதிகரிக்கக்கூடாது என்பதற்காகவும் இதைப்பற்றி அதிகம் பேசவில்லை. கடந்த 7ஆம் திகதியே இந்த முயற்சியை கைவிட்டு விட்டோம்.

அதில் முக்கியமான விடயம், பல கடிதங்கள் இங்கிருந்து அனுப்பப்பட காரணம், எமது கட்சிக்குள் இது பற்றி எப்போதோ கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும். கடந்த மே மாதம் 17ஆம் திகதி 14 விடயங்களை குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தேன். இதில் 2வது விடயமாக ஜெனீவா விடயத்தையே எழுதியிருந்தேன். அதை பார்த்து விட்டு சம்பந்தன் ஐயா பார்த்து விட்டு தொலைபேசியில் பேசினார். விரைவில் பேசுவோம் என்றார். மாவை சேனாதிராசாவும் பேசினார். ஆனால், அதை பற்றி பேசப்படவில்லை.

இதை பற்றி பலமுறை கேட்டும் கலந்துரையாடப்படவில்லையென தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!