கேரளாவை சேர்ந்த டீ கடைக்காரர், பெயர்ப் பலகை விளம்பரம் மூலம் திருமணத்துக்கு பெண் தேடி வருகிறார். சமூக வலைதளங்களில் இவரது விளம்பரத்தை பார்த்து அவுஸ்திரேலியா, பிரிட்டனில் இருந்தும் அழைப்புகள் வருகின்றன.
கேரளாவின் திருச்சூர் மாவட்டம், வல்லசாரா கிராமத்தை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (33). இவர் உள்ளூரில் டீ கடை நடத்தி வருகிறார். தற்போது இவர் திருமணத்துக்கு பெண் தேடி வருகிறார். இதற்காக இவர் இணையதளங்களில் பதிவு செய்யவில்லை. திருமண தகவல் மையங்களை நாடவில்லை.
புதிய முயற்சியாக தனது கடையின் முன்பு பெயர்ப் பலகையை தொங்கவிட்டுள்ளார். அதில் வாழ்க்கை துணையை தேடுவதாகவும் சாதி, மதம் தடையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது செல்போன் எண்ணையும் பெயர்ப் பலகையில் பதிவிட்டுள்ளார். இவரது விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து உன்னி கிருஷ்ணன் கூறியதாவது:
நான் சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். தலையில் கட்டி உருவாகி அறுவை சிகிச்சை மூலம் குணமானேன். அதன்பிறகு லாட்டரி கடை நடத்தினேன். தற்போது டீ கடை நடத்தி வருகிறேன். கடந்த சில மாதங்களாக வாழ்க்கை துணையை தேடி வருகிறேன். ஜாதகம், சாதி, மதத்தில் மிகப்பெரிய நம்பிக்கை இல்லை. எனவே எனது கடை முன்பு பெயர்ப் பலகையை தொங்கவிட்டு, வாழ்க்கை துணை தேவை என்று மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.
எனது விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவியதால் அவுஸ்திரேலியா, பிரிட்டனில் இருந்தும் அழைப்புகள் வருகின்றன. அவர்களில் பலர் எனது முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். சில எதிர்மறையான விமர்சனங்களும் வருகின்றன என தெரிவித்தார்.