தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்கள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் தமிழ் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான கட்சிகள்- ரெலோ, புளொட் என்பன கையொப்பமிட்டன. எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சி அதில் கையெழுத்திடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
2021ம் ஆண்டுஆவணி மாதம் 31ம் திகதி,
கௌரவ மிச்செல் பச்லெற்,
மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையாளர்,
ஜெனீவா.
அன்பார்ந்த உயர் ஆணையாளர் அம்மையாருக்கு,
இலங்கை தொடர்பான வாய்மொழி அறிக்கை ஒன்றினை ஐ.நா மனித உரிமைகள் மன்றத்திற்கு வழங்குவதற்கு தாங்கள் தயாராகிக் கொண்டிருக்கையில், தமிழ் அரசியற் கட்சிகளைச் சேர்ந்த நாங்கள், ஐக்கிய நாடுகள் சபையினால் 6 மாதங்களுக்கு முன்னர்,46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து தமிழர்களின் நிலைமை தொடர்பான எமது மதிப்பீட்டை தங்களுடைய கவனத்திற்கு சமர்ப்பிக்க விரும்புகின்றோம்.
12 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த போரின் போது புரியப்பட்ட அத்துமீறல்களுக்கு,கடந்த 6 மாதங்களில் தொடர்ந்தும் சட்டப் பாதுகாப்பு இருந்து வந்துள்ளதோடு, நீதியையும் பொறுப்புக் கூறலையும் மீண்டும் மீண்டும் கோரிய ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் தீர்மானங்களையும் அரசாங்கம் புறக்கணித்து வந்துள்ளது. இந் நிலையில் நீதி தடுக்கப்பட்டதோடு, சட்டப் பாதுகாப்பும் நீடித்தது. பாதிக்கப்பட்ட தமிழர்அமைப்புக்கள், மனித உரிமைப் பாதுகாப்பாளர்கள், பொது சமூகத் தலைவர்கள்,ஊடகவியளாழர்கள்மற்றும் பலர், இலங்கை ஆட்சியாளர்களால் மென்மேலும் பயமுறுத்தப்பட்டும் தொல்லைப்படுத்தப்பட்டும் வந்துள்ளனர்.
இலங்கையின் சட்ட அமூலாக்கல் அதிகாரிகளினால் அதிகரிக்கப்பட்ட அளவில் பிரயோகிக்கப்படும் கொவிட்-19 கட்டுப்பாடுகளும், பயங்கரவாத தடுப்புச் சட்டங்களும் அமைதியான எதிர்ப்புக்களுக்கான பரப்பினை மட்டுப்படுத்திக் கொண்டிருக்கையில், தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சங்களும் ஒதுக்கல்களும் தொடர்கின்றன.
இன விகிதாசாரத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்துடனும், தமிழ் மக்கள் தங்கள் நிலங்களை ஆண்டனுபவிப்பதை தடுக்கவும், அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களில்அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்த குடியேற்றங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. மகாவலி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், வனத் திணைக்களம், மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரசாங்க திணைக்களங்கள் இந்த செயற்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் மீது பரந்துபட்ட இராணுவ மயமாக்கல் திணிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க நிபுணர் குழாமான ஓக்லன்ட் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. கிட்டத்தட்ட ஆறு பொதுமக்களுக்கு ஓர் இராணுவ உறுப்பினர் என்ற ரீதியில் இராணுவ ஆதிக்கம் கடுமையானதாக உள்ளது. இதற்கிடையில், யுத்தம் முடிந்து 12 வருடங்களுக்கு பின்னரும் கூட, யாழ்ப்பாணத்தில் 23,000க்குஅதிகமான மக்கள் உட்பட, பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து நிற்கும் நிலையில் முடிவு ஏதுவும் தென்படாமல் மீள் குடியேற்றத்திற்காக காத்திருக்கின்றார்கள்.
போர்முடிவடைந்ததிலிருந்து தமது வாழ்வில் பல்வேறு சவால்களுக்கு, துன்பப்படும் தமிழ்ப் பெண்கள்தொடர்ந்து முகம்கொடுத்து வருகின்றனர்.இலங்கை இராணுவத்தால்‘பாலியல் அடிமைகளாக’ தமிழ்ப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்‘வல்லுறவு முகாம்கள்’பற்றிய விபரங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயலணி 2017 மாசி மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்திருக்கின்றது.மேலும், 2013 சித்திரையில் ஐக்கிய ராச்சியத்தின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் 90,000க்கு மேற்பட்ட தமிழ் யுத்த விதவைகள் உள்ளனர்.
குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர். காணாமல் போகச் செய்தல்கள் பற்றிய ஐ.நா செயலணி, உலகிலேயே இலங்கையில் தான் 2வது மிகப்பெரிய எண்ணிக்கையில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் இருப்பதாக 2020ல் தெரிவித்துள்ளது. காணாமல் போன தமது அன்புக்குரியவர்களை தேடி நிற்கும் அவர்களின் குடும்பங்கள், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (ரி.ஐ.டி), குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி)மற்றும் ஏனைய அரசாங்க உளவுப் பிரிவுகளால் தொல்லைப்படுத்தப்பட்டும், மிரட்டப்பட்டும், பயமுறுத்தப்பட்டும் வருகின்றனர். இந்தக் குடும்பங்களின் அமைதிவழி எதிர்ப்புக்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றன.
ஐ.நா மனித உரிமை மன்றத்தின் பல வேண்டுகோள்கள் மற்றும் தீர்மானங்களுக்கு மத்தியிலும் கொடுமையான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இலங்கை தொடர்ந்து பிரயோகித்து வருகின்றது.
எவ்வித குற்றச்சாட்டோஅல்லது விசாரணையோ இல்லாமல் அல்லது பாரபட்சமான வழக்கு விசாரணைகளின் பின்னர் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டு பல தமிழ் அரசியல் கைதிகள் வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருக்கையில், தமிழர்களுக்கு எதிராக கொடுமைக் குற்றங்கள் புரிந்ததற்காக, இலங்கைப் பாதுகாப்பு படைகளின் தனி ஒரு உறுப்பினர் கூட கைது செய்யப்படவுமில்லை, குற்றம் சாட்டப்படவுமில்லை. பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் குற்றங்களுக்கான தண்டனைத் தீர்ப்புக்களில் இருந்து அல்லது குற்றச்சாட்டுக்களில் இருந்து இப்போதுள்ள அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.
பாரம்பரியதமிழ்ப் பிரதேசங்களில் நிகழும் காணி அபகரிப்புக்கள் தொடர்பில் சில உதாரணங்கள்:-
வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முல்லைத் தீவில் அமைந்துள்ளதும் தமிழ் மக்களுக்கு சொந்தமானதுமான 617 ஏக்கர் காணி கோட்டபாய கடற்படைத்தளத்தை விஸ்தரிப்பதற்காக சுவிகரிக்கப்பட உள்ளது. இது தொடர்பான கடிதங்கள் நில அளவைத் திணைக்களத்தினால் 29.7.2021ல் பொது மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
2017/2018ல்இத்தகைய முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்புக்களால் நிறுத்தி வைக்கப்பட்டன. எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டோருக்கு எதிராக நீதி மன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கொக்கிளாய் கிழக்கு, முல்லைத்தீவில் அமைந்துள்ளதும், பொதுமக்களுக்கு சொந்தமானதுமான 44 ஏக்கர் காணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அங்கமான ஸ்ரீலங்கா கனிமமண் நிறுவனத்தினால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சுவீகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், காரைநகர், கற்கோவளத்தில் அமைந்துள்ளதும் பொது மக்களுக்கு சொந்தமானதுமான 50 ஏக்கர் காணி ஸ்ரீலங்கா கடற்படையால் சுவீகரிக்கப்படுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பொது மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்திற்காக பலாலியில் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களின் விபரங்களைக் கோரும் அறிவித்தல் ஒன்று யாழப்பாண மாவட்டச் செயலாளரால் 26.8.2021ல் வெளியிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரிவில் உள்ள சன்னாரில் 4000 ஏக்கர் காணி இராணுவப் படைகளால் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள் வாழ்வதற்கோ அல்லது விவசாயம் செய்வதற்கோ சொந்தமாக காணிகள் இன்றி உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், செங்கலடிப் பிரிவில், மயிலத்தை மடுவில் உள்ள மாதவனையில் தமது கால் நடைகளின், குறிப்பாக மாடுகளின் மேய்ச்சலுக்காக தமிழ் விவசாயிகள் பயன்படுத்தி வந்த காணிகள், அவற்றின் எல்லைப்புற மாவட்டங்களான பொலனறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்களுக்குசேனைப் பயிர்ச் செய்கை என்ற போர்வையில் தலா 3 முதல் 4 ஏக்கர் வீதம் வழங்கப்பட்டு, குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.இந்த நடவடிக்கை தமிழ் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதோடு, அரசாங்கத்தின் இனச் சுத்திகரிப்புத் திட்டத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட நடைமுறைப்படுத்தலின் ஊடாக தமிழ் மக்களின் இன ரீதியான பலத்தையும் பாரதூரமாக குறைக்கின்றது.
இதே அடிப்படையிலான இன்னொரு நடவடிக்கையில், தமிழ்ப் பிரதேசத்தில் உள்ள பட்டிப்பளை – கொக்கட்டிச் சோலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கெவுளியாமடு, கந்தர் மல்லிச் சேனையில் உள்ள 1500 ஏக்கர் வனப்பிரதேசம் 2 ஏக்கர் துண்டுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்புப் படைகளின் துணை இராணுவ அங்கமான ஊர்காவல் படையைச் சேர்ந்த 750 உறுப்பினர்களுக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சரத் வீரசேகரவினால் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் மரபுவழித் தாயகப் பிரதேசங்களில் எதிர்காலத்திலும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.
தொல்லியல் திணைக்களம்:
கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சில இராணுவ அதிகாரிகள் உட்பட, மொத்தம் 13 சிங்களவர்களைக் கொண்ட ஓர் விசேட ஆணைக்குழு ஸ்ரீலங்கா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்களுடைய பகுதிகளுக்கு வந்து, தொல்லியல் இடம் ஒன்றைக் கண்டுபிடித்து, ஒன்று அல்லது இரண்டு ஏக்கர்களுக்கு பதிலாக நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகளுக்கு அவை தொல்லியல் இடங்கள் என்ற பெயரில் வேலியிடுவதை, எதிர்காலத்தில் அங்கு சிங்களக் குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் இராணுவம் நிலை கொள்வதையும்;, உறுதிப்படுத்தும் நோக்குடன் செய்து வருகின்றார்கள்.
தமிழர்களின் தொல்லியல் இடங்களை கையகப்படுத்துவதும், அவற்றை சிங்கள பௌத்த வரலாற்று இடங்கள் என்று உரிமை கோருவதற்காக பௌத்த சின்னங்களை நிறுவுவதும்,கலாச்சார – இனப்படுகொலையே!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தத் தீவின் ஆதிக்குடிகளாக தமிழ் பேசுவோரே இருந்தனர். கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டு வரையில் சிங்கள மொழி என்பதே இருந்திருக்கவில்லை. இந்தத் தீவுக்குள் பௌத்தத்தை வரவேற்றவர்கள் தமிழ் பேசிய மக்களே. ஆயினும்,நிலங்கள் எல்லாம் சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானவை என்றே உரிமை கோரப்படுகின்றன.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் நிர்வாகப் பரப்புக்குள் அமைந்துள்ளதும், ‘நிலாவரைக் கிணறு’ என அழைக்கப்படுவதுமான தமிழரின் வரலாற்று இடமொன்றைக் கைப்பற்றி, அங்கு சில பௌத்த சின்னங்களை நாட்டுவதற்கு ஸ்ரீலங்கா இராணுவத்தினரும், தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளும் 2021 பங்குனி மாதம் 21ம் திகதி கூட்டாக முயற்சித்தனர். அப்பிரதேச மக்களும், பிரதேச சபையின் தலைவர் திரு. நிரோஸ் தியாகராஜாவும் காட்டிய எதிர்ப்பினால் அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. அந்த சர்ச்சை தொடர்பில் அச்சுவேலி பொலீஸ் நிலையத்தில் விசாரணை நடாத்தப்பட்டு, குறித்த பிரதேசசபைத் தலைவர் 4 மணித்தியாலயங்களுக்கு மேலாக துளைத்தெடுக்கப்பட்ட பின்னர், அரச ஊழியர்கள் தங்கள் கடமைகளை மேற்கொள்வதற்கு அவர் தடை ஏற்படுத்தினார் என்ற குற்றப்புகாரின் பேரில் அரச அதிகாரிகளால் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டார், பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
யுத்தத்தில் இறந்தவர்களையும் மற்றும் அரசினால் கொல்லப்பட்டவர்களையும் அமைதியாக நினைவு கூரல் அரசாங்கத்தினால் தடுக்கப்பட்டமை:
உயிரிழந்த தமது உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதை அடக்குமுறையை பிரயோகித்து அரசாங்கம் தடுத்துள்ளது. 2009 வைகாசி மாதம் 18ம் திகதி முடிவடைந்த போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை நினைவு கூரும் நாளே வைகாசி 18 முள்ளிவாய்க்கால் நினைவுநாளாகும். போரில் நிகழ்த்தப்பட்ட பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொது மக்களின் இனப்படுகொலையின் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்டிருந்த நினைவுச் சின்னமொன்று சேதப்படுத்தப்பட்டதோடு, தீபங்கள் ஏற்றியும் மலர்கள்தூவியும் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முடியாதவாறு, பொலீஸாரால் பெறப்பட்ட நீதிமன்ற கட்டளைகளின் மூலம் தடுக்கப்பட்டார்கள்.நினைவிடத்துக்கு செல்லும் வீதிகளில் பாதுகாப்புப் படைகளும் பொலீஸாரும் தடைகளை அமைத்து காவலில் ஈடுபட்டனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் மக்களால் முன்னெடுக்கப்பட்டஇத்தகைய முயற்சிகள் தடுக்கப்பட்டதோடு, அரசியற் தலைவர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் கட்டுப்படுத்துவதற்காக எச்சரிக்கை அறிவித்தல்களும் நீதிமன்ற கட்டளைகளும் அவர்களிடம் வழங்கப்பட்டன.
போரில் கொல்லப்பட்ட தமது உறவினர்களுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டார்கள். இத்தகைய சம்பவம் ஒன்றில் மட்டக்களப்பில் உள்ள கிரானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
1983 ஆடி மாத தமிழர் படுகொலைகளை நினைவுகூருதல்:
ஆடி 23ம் திகதி ஆரம்பித்து ஆடி 30ம் திகதி வரையில், கறுப்பு யூலை என்று அழைக்கப்படும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்டதும் நன்கு திட்டமிடப்பட்டதுமான தமிழினப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பின் வருடாந்த நினைவுகூரல், எச்சரிக்கைகள் மற்றும் பயமுறுத்தல்களாலும் பொலீஸாரால் பெறப்பட்ட நீதிமன்றக் கட்டளைகளாலும் பலவந்தமாக தடுக்கப்பட்டது.
1983ல் இதே காலப் பகுதியிலேயே, முன்னெப்பொழுதும் நிகழ்ந்திராத அளவில் தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதோடு பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் எரித்து நாசமாக்கப்பட்டன. கொள்ளை, வல்லுறவு மற்றும் தீவைப்பு என்பனவேபயங்கரம் நிறைந்த அந்தஇருண்ட நாட்களின் ஒழுங்குமுறையாக இருந்தது.
தலைநகர் கொழும்பில் உள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரசாங்கத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த 53 தமிழ் அரசியல் கைதிகள் சிதைத்துக் கொல்லப்பட்டனர். இந்த அரச காட்டுமிராண்டித்தனம் வெலிக்கடை ‘கொடூரக் கோரம்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இதுவரையில் இந்தக் கொலைகளுக்காக ஒருவரும் கைது செய்யப்படவுமில்லை, குற்றம்சாட்டப்படவுமில்லை. இந்த அரசியல் கைதிகளை நினைவு கூர்வதும் தடுக்கப்பட்டது. அரசின் சகிப்பின்மை மற்றும் தலையீட்டின் மத்தியில் கறுப்பு யூலையில் மரணித்த தம் உறவுகளை இந்த வருடமும் தமிழர்களால் நினைவுகூர முடியவில்லை. தமது சமூக வலைத்தளங்களில் நினைவு மற்றும் அஞ்சலிக் குறுந்தகவல்களை பதிவேற்றம் செய்த பல இளைஞர்களும், அத்தகைய நினைவுப் பதிவேற்றங்களை வேறு எவரிடமிருந்து கிடைக்கப் பெற்றவர்களும் பயங்கரவாத புலனாய்வுப் பரிவு மற்றும் பொலீஸ் உளவுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்கள் அல்லது விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள்.
அரசாங்க நிர்வாக நியமனங்களில் பாரபட்சம்:
தகைமை வாய்ந்த தமிழ் அதிகாரிகள் பலர் இருந்தும், தமிழ் அரசியற் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சிங்களம் பேசும் பிரதம செயலாளர் ஒருவர் தமிழ் பேசப்படும் வடமாகாணத்தை நிர்வகிப்பதற்கென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக சேவையில் உள்ள தகுதி வாய்ந்த தமிழ் அதிகாரிகளுக்கு, அவர்களுக்குரிய பதவி உயர்வுகளையும் நல்வாய்ப்புக்களையும் மறுப்பதாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
இயக்குனர் நாயகம், திட்டமிடல் தரத்திற்கென 10 திட்டமிடல் அதிகாரிகளுக்கு 2021 வைகாசி 11ம் திகதி பதவி உயர்வு வழங்கிய பொதுச் சேவை ஆணைக்குழு, பொது நிர்வாக திணைக்களத்திற்கு அறிவித்ததை அடுத்து அத்திணைக்களம், 7.8.2021 அல்லது அதற்கு முன்னராக அமைச்சுக்களில் அவர்களுக்கு கடமைகளை ஒதுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்பியது. பதவி உயர்வு வழங்கப்பட்ட 10 அதிகாரிகளில் 5 சிங்களவர்களும், 4 தமிழர்களும் ஒரு தமிழ் பேசும் முஸ்லிமும் இருந்தனர். சிங்கள அதிகாரிகள் கடமைகளை பொறுப்பேற்க அனுமதிக்கப்பட்ட அதே வேளையில், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களால் தமிழ், முஸ்லிம் அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு சிங்கள அதிகாரிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரச நிர்வாக சேவையில் உள்ள தமிழ் அதிகாரிகளுக்கு இப்போது இழைக்கப்படும் பாரபட்சங்களும், நெருக்கடிகளும் இவ்விதமே அமைந்துள்ளன.
காணாமல் போனோரின் அலுவலகத்திற்கு நியமிக்கப்படும் இராணுவ அதிகாரிகள்:
காணாமல் போன தமிழர்களுக்கு இராணுவமே பொறுப்பு என்ற போதிலும் காணாமல் போனோர் அலுவலகத்திற்கான நியமனங்கள் இராணுவத்தினரின் அணிவரிசைகளில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அலுவலகத்தில் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டிருப்பதால் தாங்கள் அங்கு செல்வதற்கும், சாட்சியம் அளிப்பதற்கும் அஞ்சுவதாக, தமது அன்புக்குரியவர்கள் காணாமல் போய்விட்ட நிலையில் உள்ள தமிழ்ப் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
‘காணாமல் போன நபர்களையோ அல்லது காணாமல் போனமைக்கான காரணங்களையோ அல்லது இவ்விடயத்தில் குற்றம் இழைக்கப்பட்டதா? என்பது பற்றியோ தேடிப் பார்ப்பதற்கு தேவை எதுவும் கிடையாது நட்டஈடு பற்றித் தீர்மானிப்பதுதான் இப்போதுள்ள கேள்வி’ என்று 2021 ஆவணி 30ம் திகதி நீதி அமைச்சர் ஊடாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது என்ற விடயத்தை தெரிவிப்பது மிகவும் பொருத்தமானது என நாம் கருதுகின்றோம். 2009ம் ஆண்டு வைகாசி மாதத்தில் போர் முடிவடைந்ததிலிருந்து தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான விவகாரமாக இருந்து வரும் இந்த விடயத்தில், அரசாங்கத்தின் உணர்வுகெட்ட மனப்பாங்கினையே இது பிரதிபலிக்கின்றது என்பதை நாம் தெரிவித்தே தீரவேண்டி உள்ளது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலானஅமைதிவழி எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர்களும், காணாமல் போனோரின் குடும்பங்களும் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு பயமுறுத்தப்படுகின்றார்கள்:
பி2பி(பொத்துவில் முதல் பொலிகண்டி வரை) பேரணி என்று அழைக்கப்பட்ட தமிழர் அமைதிவழி எதிர்ப்பு யாத்திரையின் தலைவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு உட்பட ஸ்ரீலங்கா புலனாய்வு அமைப்புக்களால் மீண்டும் மீண்டும் தொல்லைப்படுத்தப்படுகின்றனர். விசாரணை என்ற பெயரில் இத்தலைவர்கள் இந்த உளவுப் பிரிவுகளால் அழைக்கப்பட்டு அவர்களைபணிய வைப்பதற்காக மனோரீதியான தொல்லைகளுக்கும் உளவியல் அழுத்தங்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். பொலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பாரிய எதிர்ப்புக்கு நடுவிலும் பல்லாயிரக் கணக்கில் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் கலந்து கொண்ட இந்த அமைதி யாத்திரையை மரபுவழித் தமிழர் தாயகத்தின் ஊடாக பி2பி ஒரு வாரம் நடாத்தியதோடு, ஸ்ரீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக புரியப்பட்ட போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பனவற்றுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீலங்காவை நிறுத்துமாறும், 1948ல் ஸ்ரீலங்கா சுதந்திரமடைந்ததிலிருந்து நீடித்து நிற்கும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு ஏதுவாக, சர்வதேசத்தால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படக் கூடிய பொது வாக்கெடுப்பொன்றை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தது.
கடந்த பல வருடங்களாக தமது அன்புக்குரியவர்களுக்கு நீதியும், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் கோரி, தொடர்ச்சியானதும் விடாப்பிடியானதுமான போராட்டம் ஒன்றினை நடாத்தி வரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த அமைதியான செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவாலும், குற்றவியல் புலனாய்வப் பிரிவாலும் அடிக்கடி தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். இந்த அரச நிறுவனங்களைச் சேர்ந்த புலனாய்வு அலுவலர்கள் விசாரணை என்ற போர்வையில் இரவு வேளைகளில் ஏற்கத்தகாத நேரங்களில் அவர்களின் வீடுகளுக்கு வருகைதந்து தொல்லை தருகின்றனர். இந்த நடவடிக்கையாளர்களில் மிகப் பெரும்பாலானோர் தமது வாழக்;கைத் துணைவர்களை அல்லது பிள்ளைகளை அல்லது இருசாராரையும் பறிகொடுத்த நிலையில் தமது குடும்பப் பொறுப்புக்களை சுமந்து நிற்கும் பெண்கள் ஆவர்.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் பங்கீடு என்பனவற்றை கையாழ்வதற்கு தேவைப்படுகின்றது என்ற தோற்றப்பாட்டோடு,பொதுஜன பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ்,ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால்பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அவசரகால நிலைமை, கடந்த காலத்தில் பல தடவைகள் இந்த நாடு அனுபவித்திருப்பதைப் போலவே ஓர் இராணுவ ஆட்சிக்கு வழியமைக்கக் கூடியது. ஒரு மாதகால முடிவில்,அது மேலும் நீடிக்கப்படுவதற்குபாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைக் கோராமல், தானாகவே வலுவிழந்து போகுமாறு இந்த அவசரகால நிலைமை அனுமதிக்கப்பட்டால் அன்றி, பேச்சு மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரங்கள் உட்பட, மனித உரிமைகள் என்பன சட்டப் பாதுகாப்புடன் மீறப்படுவதிலேயே இது இலகுவில் போய் முடியக் கூடியது ஆகும்.
இந்த விடயங்களை தங்களின் பரிவுடன் கூடிய கவனத்திற்கும், பரிசீலனைக்கும் அவசியமான நடவடிக்கைக்கும், அத்துடன் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் தங்களுக்குள்ள பற்றுறுதிக்கும், தங்களின் சளைக்காத முயற்சிகளுக்கும் ஆதரவாகவும் நாம் சமர்ப்பிக்கின்றோம்.
நன்றியுடன்,
விசுவாசம் உள்ள
நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் பா.உ
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி
செல்வம் அடைக்கலநாதன் பா.உ
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தர்மலிங்கம் சித்தார்த்தன் பா.உ
தலைவர் – ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி
பிறேமச்சந்திரன் – முன்னாள் பா.உ
தலைவர் – ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி
ஸ்ரீகாந்தா– முன்னாள் பா.உ
தலைவர் – தமிழ்த் தேசியக் கட்சி
கோ. கருணாகரம் பா.உ
செயலாளர் நாயகம்தமிழ் ஈழ விடுதலை இயக்கம்.
எஸ்.நோகராதலிங்கம் பா.உ
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்