இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள்ளிருந்து இரண்டாவது கடிதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்ப்பட்டுள்ளது. இம்முறை மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய பரப்பிலிருந்து அனுப்பப்பட்ட 4வது கடிதம் இதுவாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை கலந்து பேசி நேற்று -இரா.சம்பந்தனின் கையொப்பத்துடன் மட்டும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
இன்று, இலங்கை தமிழ்அரசு கட்சியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 பிரமுகர்களின் கையொப்பத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராசா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் ஆகியோர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
இந்த கடிதம் அனுப்பப்பட்டதை கையெழுத்திட்ட வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் உறுதி செய்தார்.
முன்னதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு (இலங்கை தமிழ் அரசு கட்சி இணங்க மறுத்தது) மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியன கூட்டாக ஒரு கடிதமும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு கடிதமும் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.