மக்களின் அவலங்களை அரசியலாக்குவதும், அரசியலுக்காக மக்களை அவலங்களுக்கு உள்ளாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொவிட் 19 எனும் நோயில் இருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை ஒழுங்குபடு்தும் வகையில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை தொடர்பாக இன்று(06.08.2021) நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“சாணேற முழம் சறுக்கும்” என்பார்கள். எமது நாட்டிலும் அவ்வாறான நிலையே காணப்படுகின்றது.
நாட்டில் கொரோனா தொற்றானது நாளாந்தம் 200 மேற்பட்ட மரணங்களை ஏற்படுத்துவதுடன் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்களையும் உருவாக்கி வருகின்றது.
எமது நாடு இன்று எமது ஒரு மௌனமான வன்முறைக்கு மோசமாக முகங்கொடுத்துள்ளது. மௌனமாகவே வருகின்ற நோயால் மௌனமாகவே மக்கள் உயிரிழந்து போகின்ற நிலை காணப்படுகின்றது. இதனால் இறந்த உடலங்களை தூக்கிச் செல்வதற்கு கூட ஒருவரும் முன்வராத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இத்தகைய நிலையில் குறித்த அனர்த்தத்தை கட்டுப்படுத்த நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மறுபுறம் முடக்கப்படுவதால் நாடு பாரிய பொருளாதாரத்தை இழக்கும் நிலை காணப்படுகின்றது என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த இரண்டிற்கும் நடுவில் மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக அல்லலுறும் நிலை நீடித்து வருகின்றது.
இந்த இரண்டு பக்க அடியிலிருந்து மக்களை பாதுகாக்கவே அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் எதிர்க் கட்சியினர் தமது சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனால் மனித குலத்தை பலியெடுத்துவரும் இந்த கொரோனா பெருந்தொற்றை இல்லாதொழிக்க உலக நாடுகள் தமக்கிடையே இருந்த அரசியல் பேதங்ளை மறந்து ஒன்றுபட்டு உறுதிகொண்டுள்ளனர்.
அதுபோல இலங்கைத் தீவிலும் அனைத்து தரப்பினரும்தத்தமது சுயநலன்களிலிருந்து விடுபட்டு ஒன்றுபட்டு எமது நாட்டிலிருந்து இந்த பெருந்தொற்றை இல்லாதொழிக்க ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.
வளர்ந்த தேசங்களே இன்று இந்த பெருந்தொற்றால் ஆடிப்போயுள்ள நிலையில் வளர்ந்துவரும் எமது நாடான இலங்கை தீவு எம்மாத்திரம் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன் உலக நாடுகளின் தரவுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை தீவின் கொரோனா அனர்த்தங்களின் பதிவுகள் குறைவாகவே உள்ளது.
இதற்கு காரணம் நாட்டில் தற்போதுள்ள நிர்வாகத்திறன் என்றே கூறவேண்டும். இந்நேரம் வினைத்திறன் அற்ற ஆட்சியொன்று இருந்திருந்தால் இன்றைய அவலங்களை விடவும் அதிகளவான அவலங்களை சந்தித்திருக்க நேரிட்டிருக்கும்.
அந்தவகையில் இந்த சூழலிலிருந்து நாம் மீண்டெழ வேண்டும். நாட்டின் பொருளாதாதையும் நாம் மீண்டெழச் செய்ய வேண்டும்.
அந்நிலையில் மக்களின் அன்றாட உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஒரு திட்டமிட்ட செயற்பாடுகள் நடந்தேறி வருகின்றது. இந்த துர்ப்பாக்கிய நிலை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது.
இதை கட்டுப்படுத்தவே இந்த அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் அரிசி சீனி போன்ற பொருட்களுக்கு அதிகபட்ச நிர்ணய விலை கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட பல மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களும் மீட்கப்பட்டு மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
எனவே இன்றைய சூழ்நிலையிலிருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ஈ.பி.டிபி ஊடகப்பிரிவு-