நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசினால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் எவ்வித தக்க காரணங்களுமின்றி வீதியில் உலாவித்திருந்தோருக்கு எதிராக சுகாதாரத்துறையினரும், பாதுகாப்பு படையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சாய்ந்தமருதில் அத்தியவசிய தேவையின்றி வெளியேறிய 20 நபர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனையும் 17 நபர்களுக்கு அண்டிஜென் பரிசோதனையும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காமல் வீதியில் உலாவி திரிந்த 37 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 நபர்கள் தொற்றாளராகவும் அடையாளம் காணப்பட்டனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளுமாறும், வீட்டைவிட்டு தேவையில்லாமல் வெளியேறி வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்றை கொண்டு சேர்க்காமல் சுகாதார துறையினருக்கும், இந்த கொரோணா ஆட்கொள்ளி நோயை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.