இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டுக் காயமடைந்ததோடு, ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் அவர்கள் பறித்துச் சென்றுவிட்டதாக காரைக்கால் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு, காரைக்கால் மேடு பகுதிகளைச் சேர்ந்த 11 மீனவர்கள், 2 பைபர் படகுகளில் நேற்று (3) காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் காரைக்கால் மீனவர்களைத் தாக்கியுள்ளனர்.
காயங்களுடன் கரை திரும்பிய மீனவர்கள் இது தொடர்பாகக் கூறுகையில், ”இந்தியக் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி வந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சரமாரியாக எங்களைத் தாக்கத் தொடங்கினர். இதில் எங்களுக்குக் காயம் ஏற்பட்டது. மேலும், படகினுள் வந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், ஜிபிஆர்எஸ் கருவிகள் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு அவர்களது படகில் தப்பிச் சென்றுவிட்டனர்” என்று தெரிவித்தனர்.
காயங்களுடன் இன்று காலை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு வந்த மீனவர்களை, மீனவப் பஞ்சாயத்தார்கள் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குச் செல்வதில்லை என்று மீனவ கிராமங்களில் ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் நம்முடைய எல்லைப் பகுதிக்குள் புகுந்து மீனவர்களைத் தாக்கி அட்டூழியம் செய்யும் செயலில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியிடம் பேசி நிரந்தரத் தீர்வு காணும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தக் கொடூரத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும் வகையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினிடமும் பேசவுள்ளோம்” என்று நாஜிம் தெரிவித்தார்.