25.3 C
Jaffna
December 19, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு?: தமிழ் அரசு கட்சி தனி வழி; தமிழ் தேசிய கட்சிகள் ஓரணி!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு தமிழர் தரப்பிலிருந்து இரண்டு கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இரண்டு பகுதிகளாக பிரிந்து இந்த கடிதங்களை அனுப்பி வைக்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஜனநாயக முறைப்படி முடிவுகள் எடுக்கப்படுவதில்லை, இரா.சம்பந்தன்-சுமந்திரனின் ஏகபோகமே நிலவுகிறது என்ற நீண்டநாள் குற்றச்சாட்டு பின்புலத்தில், முதன்முறையாக அந்த நிலைமைக்கு எதிராக பங்காளிக்கட்சிகள் தெளிவான நிலைப்பாடொன்றை எடுத்துள்ளன.

தற்போதைய நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து ஒரு கடிதம் அனுப்பவுள்ளது. கூட்டமைப்பின் இரண்டு பங்காளிக்கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய பரப்பிலுள்ள ஏனைய கட்சிகள் இணைந்து இன்னொரு கடிதத்தை அனுப்பவுள்ளன.

எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பான வாய்மொழி புதுப்பிப்பை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த நிலையில், தமிழ் கட்சிகள் ஓரணியாக தமது நிலைப்பாட்டை ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டுமென, அண்மைய தமிழ் கட்சிகளின் சூம் கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டது. இந்த சூம் கலந்துரையாடலை ஒழுங்கமைப்பதில் ரெலோ முக்கிய பங்குவகித்தது.

இறுதியாக நடந்த சூம் கலந்துரையாடலில், இந்த விவகாரம் பேசப்பட்ட போது, இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொண்டிருந்தார்.

“கூட்டங்களில் கலந்து கொள்ளும் மாவை சேனாதிராசா ஒன்றை சொல்வார். ஆனால் அவருக்கே தெரியாமல் சம்பந்தன், சுமந்திரன் செயற்படுவார்கள். அதனால், ஐ.நா விவகாரம் போன்ற முக்கிய விடயங்களை பேசுவதெனில் எம்.ஏ.சுமந்திரனையும் அழையுங்கள்.அப்பொழுதுதான் தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாட்டை அறியலாம்“ என தமிழ் மக்கள் கூட்டணியினர் வலிறுத்தினர்.

இதை தொடர்ந்து கூட்டத்தின் இடையில் எம்.ஏ.சுமந்திரனும் அழைக்கப்பட்டார்.

இந்த கலந்துரையாடலில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்புவது, அரசியல் கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு உள்ளிட்ட 4 விடயங்களை நிறைவேற்றிய பின்னரே அரசுடன் பேச்சை முன்னெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இந்த நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கான கடிதத்தை தயாரிக்கும் பணியை ரெலோவே முன்னெடுத்தது. இதன் பிரதியை அனைத்து தமிழ் தரப்பிற்கும் அனுப்பியது.

இந்த நகர்வு ஆரம்பித்த பின்னர், நிபுணர் குழுவின் மூலம் ஒரு கடிதத்தை தாமும் தயாரிக்க ஆரம்பித்துள்ளதாக இரா.சம்பந்தன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

பொதுவாகவே, முக்கிய விவகாரங்களில் ஏனைய மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து தனது கையொப்பத்தை இட இரா.சம்பந்தன் விரும்புவதில்லை, தனது கையொப்பத்துடன் மட்டுமே அனுப்ப விரும்புவார் என்ற அப்பிராயம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே உண்டு. அதை உறுதி செய்யும் விதமான சம்பவங்கள் பல நடந்துமுள்ளன.

ஏனைய தமிழ் தரப்புக்கள் ஆணையாளருக்கு கடிதம் எழுதும் முயற்சியை ஆரம்பித்தாலும், அரசுடன் சில விவகாரங்களில் இரகசிய இணக்கத்திற்கு வரும் இரா.சம்பந்தன்- சுமந்திரன் தரப்பு, காட்டமாக மனித உரிமைக்குழுவுக்கு கடிதம் அனுப்பப்படுவதை விரும்பாததாலுமே இந்த முயற்சியை ஆரம்பித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வலுவான அதிருப்தி கிளம்பியுள்ளது.

வழக்கமாக சம்பந்தன்- சுமந்திரன் தரப்பு இப்படியான முயற்சியை ஆரம்பித்தால், கப்சிப்பென அடங்கி விடும் பங்காளிகளும், இம்முறை வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மல்லுக்கட்டுகிறார்கள்.

ரெலோவின் முன்முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட கடித முயற்சிக்கு கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன ஆதரவளித்துள்ளன. நேற்று இரவு நிலவரப்படி, இந்த கடிதத்தில் ரெலோவின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா உள்ளிட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கை தமிழ் அரச கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டது. எனினும், அவர் அதில் கையெழுத்திடவில்லை.

புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தனும் இதுவரை கையெழுத்திடவில்லை. அனேகமாக, இன்று காலை அவர் தமது ஆவணத்தில் கையெழுத்திட்டு அனுப்புவார் என ரெலோவின் முக்கிய தலைவர் ஒருவர் இன்று காலையில் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

ரெலோவின் முயற்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இரா.சம்பந்தன்- எம்.ஏ.சுமந்திரன் தரப்பினராலும் ஒரு கடித முயற்சி ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த கடிதத்தில் இரா.சம்பந்தனும், சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என கூறுபவர்களும், புத்திஜீவிகளும் கையெழுத்திடுவார்கள் என ஏற்பாட்டாளர்களால் கூறப்பட்டது. எனினும், தற்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் அதனை கையொப்பத்திற்காக அனுப்புவோம் என ஏற்பாட்டாளர்களால் கூறப்பட்டுள்ளது.

அதிகமான கட்சிகள் கையொப்பமிட்ட- முதலாவது ஆவணம்- இன்று காலை ஊடகங்களிற்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தமிழ் அரசு கட்சி மாத்திரம் கையொப்பமிடும் ஆவணம், இன்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு அனுப்பப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

அர்ச்சுனாவை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்குங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

Pagetamil

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு : இந்தியா – இலங்கை கூட்டறிக்கை

Pagetamil

Leave a Comment