அமெரிக்காவில் இடா (Ida) சூறாவளியால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகி உள்ளனர். நியூயோர்க்கில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப் போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயோர்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கன மழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 43 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூயிசியானாவில் இடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது.
அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா கருதப்படுகிறது.
சூறாவளி பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள், ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட சிறிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நியூயோர்க் நகரில் சுரங்கப்பாதைக்குள் கன மழை கொட்டும் காட்சியும், அதற்கு மத்தியிலும் இயக்கப்பட்ட கடைசி ரயில் சேவை வந்து போகும் காணொளியை உள்ளூர் மக்கள் பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில், நியூயார்க் நகரின் ப்ரூள்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளிலும் வெளியிடங்களிலும் மக்கள் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணிகளை உள்ளூர் நிர்வாகங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
தற்போது நியூயோர்க் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நகர மேயர் பில் டி பிளாசியோ, வரலாறு காணாத வானிலையை நியூயோர்க் அனுபவித்து வருகிறது. கொடூரமான வகையில் ஓடும் வெள்ளத்தால் நகர சாலைகள் படுபயங்கர நிலையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
Wild scene in the subway tonight #subwaycreatures #ida pic.twitter.com/G5MJp1qGhw
— Rick (@SubwayCreatures) September 2, 2021
நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை, வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. நியூயோர்க் நகரில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.