தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று (1) காலை மாரடைப்பால் சென்னையில் உயிரிழந்தார். இறந்த விஜயலட்சுமியின் உடலுக்கு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். சசிகலாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதற்கிடையே விஜயலட்சுமியின் உடல் நேற்று தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இன்று (02) உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்கிடையே பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டுக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கண்ணீர் விட்ட ஓபிஎஸ்ஸுக்கு, டிடிவி தினகரன் கைகளைப் பிடித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செங்கோட்டையன், விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், மாஃபா பாண்டியராஜன், காமராஜ் மற்றும் பல அதிமுக நிர்வாகிகள் விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். தொடர்ந்து காரில் புறப்பட்டு பெரியகுளம் சென்றனர்.