பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கை அரசின் போதாமைகளை சுட்டிக்காட்டி ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு தமிழ் தரப்புக்கள் சார்பில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே இரண்டு விதமான வெவ்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது.
எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான வாய்மொழி அறிக்கையை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் சமர்ப்பிக்கவுள்ளார்.
மிச்செல் பச்லெட் அம்மையார் தனது அறிக்கையில் கவனம் கொள்ள வேண்டிய விவகாரங்களை சுட்டிக்காட்டி, தமிழ் கட்சிகள் அனைத்தின் சார்பிலும் கடிதமொன்றை அனுப்பி வைக்க தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) முயற்சி மேற்கொண்டு வருகிறது. ரெலோவின் நடவடிக்கை ஆரம்பித்ததை தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் தரப்பினாலும் ஒரு கடித வரைபு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தை பெற்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்ப ரெலோ முயற்சித்து வருகிறது.
இதற்கான வரைபு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் அனுப்பப்பட்டு, இறுதி ஆவணம் நேற்று (1) அனைத்து நடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடயம், காணி விடுவிப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விடயங்கள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக, ரெலோவின் முக்கிய தலைவர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைவர்களிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த ரெலோ பிரமுகர் தெரிவித்தார்.
இதற்குள், நேற்று எம்.ஏ.சுமந்திரன் தரப்பிலிருந்து வேறொரு வரைபு தயாரிக்கப்படும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் பக்கம் அறிந்தது.
அதன் வரைபு இன்று ஏனையவர்களின் பார்வைக்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.