முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள், பாஸ்போர்ட் எடுத்து இலங்கை சென்று உறவினர்களை சந்தித்து விட்டு திரும்பும்போது மீண்டும் முகாம் பதிவு வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து 1983-ம் ஆண்டு அகதிகளாக வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள், கோவை மாவட்டத்தில், ஆழியாறு, கோட்டூர் பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில், சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் 110-வது விதியின் கீழ், தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீட்டுவசதி, கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ரூ.317.40 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்திருந்தார். முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள இலங்கை தமிழர்கள், முகாமில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கோட்டூர் பேரூராட்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமில் வசிப்பவர்கள், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
தமிழக அரசு சார்பில் மாதம்தோறும் அகதிக் கொடுப்பனவு தொகையை உயர்த்தி வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முகாம்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். ஆனால் இரண்டு பொதுக் கழிப்பிடம் மட்டுமே உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டி விரிசல் விழுந்து நீர்க்கசிவு உள்ளதால் எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. முகாமில் 65 வீடுகளுக்கு மின்வசதி இல்லை. ரேஷன் பொருட்கள் வாங்க 2 கி.மீ தொலைவு செல்ல வேண்டியுள்ளது.
முகாம் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும். மேலும் முகாமில் வசிப்பவர்கள் இலங்கையில் உள்ள உறவினர்களைப் பார்க்க பாஸ்போர்ட் எடுத்துச் செல்லும்போது அவர்களின் முகாம் பதிவை நீக்கி விடுகின்றனர். அவர்கள் மீண்டும் முகாம் திரும்பும்போது அவர்களை முகாமில் அதிகாரிகள் பதிவு செய்வதில்லை. இதனால் அவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. கோட்டூர் முகாமில் 23 பேரும், ஆழியாறு முகாமில் 25 பேரும் முகாம் பதிவு இல்லாமல் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மீண்டும் முகாம் பதிவு வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.