ஆப்கானிஸ்தானின் காபூல் ஹமீட் ஹர்சாய் விமான நிலையத்திற்கு வெளியே பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்களை பழிவாங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சூளுரைத்தார்.
‘நாங்கள் உங்களை வேட்டையாடுவோம். அமெரிக்காவிற்கு தீங்கிழைக்க நினைப்பவர்களிற்கு என்ன நடக்குமென்பது தெரிந்திருக்கும். நாங்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டோம்“ என தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் நடந்த உணர்ச்சிக் கொந்தளிப்பான செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள ஹமீட் கர்சாய் விமான நிலையத்திற்கு வெளியில் நடத்தப்பட்ட இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 60 ஆப்கானிய பொதுமக்களும், 13 அமெரிக்க மரைன் இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.
இதை தொடர்ந்து இன்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பைடன், தாக்குதல் நடத்தியவர்களை பழிவாங்குவதாக சூளுரைத்தார்.
“இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கும், அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் எவருக்கும் இதைத் தெரியும்- நாங்கள் மன்னிக்க மாட்டோம். நாங்கள் மறக்க மாட்டோம்” என்று பைடன் கூறினார்.
“நாங்கள் உங்களை வேட்டையாடி விலை செலுத்தச் செய்வோம். எனது உத்தரவின் பேரில் ஒவ்வொரு நடவடிக்கையிலும் எங்கள் மக்களின் நலன்களை நான் பாதுகாப்பேன்“ என்றார்.
ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் கடந்த வருடத்தில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப்படைகள் தாக்குதலிற்கு உள்ளாகவில்லையென ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்ட போது, திரும்பப் பெறும் ஒப்பந்தம் காரணமாக கடந்த வருடத்தில் அமெரிக்கப் படைகள் தாக்குதல்களை எதிர்கொள்ளவில்லை என்று பைடன் கூறினார்.
“அமெரிக்கர்கள் மீது எந்த தாக்குதல்களும் நடக்காததற்கு காரணம், ஜனாதிபதி டிரம்ப் அளித்த உறுதிமொழி. ‘நான் மே 1 க்குள் வெளியே வருவேன்; இதற்கிடையில், எந்த அமெரிக்கர்களையும் தாக்கக்கூடாது என்று நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது அந்த ஒப்பந்தம்” என்று பைடன் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி தனது உரையின் முடிவில், “20 வருடப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது” என்று கூறினார்.