இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மொத்தம் 40.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் 3 விக்கெட்டும் ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள், இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து ரன் குவித்தனர். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில, 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 432 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் ஸ்கோரைவிட 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 355 ரன்கள் எடுத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற இமாலய இலக்குடன், இந்தியா தனது 2வது இன்னிங்சை ஆடுகிறது. டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும். முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்சில் விஸ்வரூபம் எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.