1998ஆம் ஆண்டுவரை டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மட்டுமே தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு ஒருநாள், T20 போட்டிகளுக்கான தரவரிசையும் வெளியிடப்பட்டது. அணிகள், பேட்ஸ்மன், போலர், ஆல்ரவுண்டர் என அந்தந்த பிரிவுகளில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு தரவரிசையில் இடம் கொடுக்கப்படும். தற்போதைய டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மன் லிஸ்டில் கேன் வில்லியம்சன், போலர் லிஸ்டில் பாட் கம்மின்ஸ், ஆல்-ரவுண்டர் லிஸ்டில் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் முதலிடத்தில் இருக்கிறார்கள். அதேபோல் ஒருநாள், T20 தரவரிசையிலும் அவ்வபோது சிலர் முதலிடத்தைப் பிடித்து வருகின்றனர். இந்த மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் நம்பர் 1 இடத்தை பிடித்த 3 பேட்ஸ்மன்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
ரிக்கி பொண்டிங்:
ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த ரிக்கி பாண்டிங் 2003, 2007ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை பெற்றுக்கொடுத்து, சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்தார். கேப்டன்ஸியில் மட்டுமல்ல, பேட்ஸ்மனாகவும் வெற்றி நடை போட்டவர் ரிக்கி பாண்டிங். 2005ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2006 ஜனவரி வரை, 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் முதலிடத்தில் இருந்தார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் ஒருநாள், T20, டெஸ்டில் முதலிடம் வகித்த வீரர் இவர் மட்டுமே. சர்வதேச கிரிகெட்டில் மொத்தம் 71 சதங்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேத்யூ ஹெய்டன்:
ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் 103 டெஸ்ட், 161 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் குறிப்பாக, தனது கிரிக்கெட் வாழ்க்கை முடியும் தறுவாயில் 9 T20 கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், அதில் 4 அரை சதங்கள் விளாசி நம்பர் 1 இடத்தை பிடித்தார். 2003ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 380 ரன்கள் குவித்து அசத்தினார். இன்றுவரை ஆஸியின் தனி நபர் அதிகபட்சம் இதுதான். ஆஸி அணிக்காக 40 சதங்களுடன் 15,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ள இவர் ஒருநாள், T20, டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.
விராட் கோலி:
தற்கால கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத பெயர் விராட் கோலி. இந்திய அணியை தொடர்ந்து வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார். ஒருநாளில் 12,000 ரன்களை கடந்துள்ள இவர், டெஸ்டிலும் 7,500 ரன்களை கடந்து விளையாடி வருகிறார். மொத்தம் 70 சதங்கள் விளாசி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த மூன்றாவது வீர்ர் என்ற சாதனையைத் தக்கவைத்துள்ளார். சச்சினின் 100 சதங்கள் சாதனையை, இவரால் மட்டுமே முறியடிக்க முடியும் என நம்பப்படுகிறது. 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் சச்சின், டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். அதன்பிறகு, இந்திய வீரர்களில் விராட் கோலி மட்டுமே டெஸ்டில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். அதேபோல் T20, ஒருநாள் கிரிக்கெட்டிலும் நம்பர் 1 இடத்தை இவர், நீண்ட காலம் தக்கவைத்திருந்தார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் நம்பர் 1 இடத்தை பிடித்த மூன்றாவது இந்திய வீரராக திகழ்கிறார் கோலி.