உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா உடனான விமானப் போக்குவரத்து வசதியை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) நிறுத்திக் கொண்டது. தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கடந்த 5ஆம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
அனைத்து பயணிகளும் விமானப் பயணத்திற்கு முன்னதாக 48 நேரத்திற்குள் எடுத்த நெகடிவ் பிசிஆர் பரிசோதனை சான்று சமர்பிக்க வேண்டும். விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமான நிலையத்தில் ரேபிட் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம் வந்து சேர்ந்த முதல் மற்றும் 9வது நாளில் பாலிமரைஸ் செயின் ரியாக்ஷன் பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அபுதாபிக்குச் சென்று விசா ஆன் அரைவல் (visa-on-arrival) வசதியைப் பயன்படுத்தி தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறைகளில் இருந்து விலக்கு பெற்று, துபாய் செல்ல முடியுமா என்று இந்தியாவை சேர்ந்த பயணி ஒருவர் எடிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் ட்விட்டர் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள எடிஹாட் நிறுவனம், இந்தியாவில் இருது வரும் பயணிகள் மற்றும் அந்நாட்டில் கடந்த 14 நாட்கள் தங்கியிருந்தவர்களுக்கு விசா ஆன் அரைவல் வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் வழங்கிய விசா ஆன் அரைவல் வசதியை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும் பொருந்தும்.
விமானப் போக்குவரத்து தொடர்பான மாற்றி அமைக்கப்பட்ட விதிமுறைகளை எங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்தியப் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.