பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த வாரம் மும்பை விமான நிலையத்தில் மத்திய தொழிலக காவல்படை அதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்டார். நடிகர் சல்மான் கான், நடிகை கத்ரீனா கைஃப் ஆகியோர் இணைந்து நடித்துவரும் படம் ‘டைகர் 3’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அவர்கள் ரஷ்யா செல்லும் பொருட்டு விமான நிலையம் வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், மும்பை விமான நிலையம் சென்ற சல்மான் கான், முனையத்திற்குள் நுழைய முயற்சித்த போது, பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி அவரை தடுத்து நிறுத்திய மத்திய தொழிலக காவல்படை வீரர், பாதுகாப்பு சோதனைச் சாவடியிலிருந்து ஒப்புதல் வாங்கிவரும்படி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. அதேசமயம், சல்மான் கானை தடுத்து நிறுத்திய வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், சல்மான் கானை தடுத்து நிறுத்திய வீரருக்கு அவரது கடமையை பாராட்டி வெகுமதி அளிக்கப்பட்டதாக சிஐஎஸ்எஃப் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சிஐஎஸ்எஃப் அலுவலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பதிவிடப்பட்ட ட்விட்டர் பதிவில் உண்மை இல்லை. தகுந்த ஆதாரங்கள் இல்லை. உண்மையாக, கடமையை நிறைவேற்றுவதில் முன்மாதிரியாக செயல்பட்ட அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று மத்திய தொழிலக காவல்படை பதிவிட்டுள்ளது.