முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இறந்தவர் ஒருவரின் சடலத்திற்கு பதிலாக திருமுறிகண்டி பகுதியை சேர்ந்த வேறு ஒருவரின் சடலம் வவுனியா கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.
இந்நிலையில் தமது கணவனின் உடலை வழங்காமைக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் மீது பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் அவரது மனைவி.
கடந்த 22ஆம் திகதி முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் உயிரிழந்த 74 வயதுடைய முதியவரான குமாரன் கோபாலன் என்பவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காகவும் பி.சி.ஆர் பரிசோதனைக்காகவும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டது.
திருமுறிகண்டியை சேர்ந்த உயிரிழந்தவருக்கு கொரோனா இல்லை என்ற பெறுபேறு நேற்று முன்தினம் (24) இரவே கிடைத்துள்ளது.
இதற்கமைய மரண விசாரணை அதிகாரியின் அனுமதியுடன் நேற்று (25) காலை சடலத்தினை கொண்டு செல்வதற்காக மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறைக்கு சென்ற போது அங்கு உயிரிழந்தவரின் சடலம் இருக்கவில்லை.
கடந்த 23 ஆம் திகதி முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் பருவகால தொழில் நடவடிக்கைக்காக வந்த புத்தளத்தினை சேர்ந்த 65 வயதான ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலத்திற்கு பதிலாக முறுகண்டியை சேர்ந்த 74 வயதானவரின் சடலத்தினை, அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதால் அவரின் சடலத்தினை எரிப்பதற்காக நேற்று முன்தினம் வவுனியாவிற்கு வைத்தியசாலை நிர்வாகம் அனுப்பியுள்ளனர். முறுகண்டியை சேர்ந்தவரின் சடலத்துடன் வவுனிய சென்ற புத்தளம் வாசியின் உறவினர்கள் சென்றனர். வவுனியாவில் சடலம் எரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் உயிரிழந்த நாயாற்றினை சேர்ந்த புத்தளம் வாசியின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் காணப்படுகிறது. இதனால், முறுகண்டியினை சேர்ந்த இறந்தவரின் உறவினர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்திடமும், பொலிசாரிடமும் தெரியப்படுத்தியுள்ளதுடன் எரித்த உடலினை மீண்டும் கொண்டுவர முடியாத நிலையில் இருதரப்பினரும் இணக்கப்பாட்டுக்கான பேச்சு முன்னெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வைத்திய சாலை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு எதிராக குமாரன் கோபாலன் என்பவரின் மனைவி வைத்தியசாலை பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து சட்டரீதியாக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.