இலங்கை கிரிக்கெட்டின் அழைப்பு ரி20 லீக் இறுதிப் போட்டியில் தசுன் ஷானக தலைமையிலான சாம்பல் அணி, தினேஷ் சந்திமால் தலைமையிலான சிவப்பு அணியை 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த தொடரில் சாம்பல் அணி எந்தப் போட்டியிலும் தோல்வியடையவில்லை.
சாம்பல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 201/4 ரன்கள் எடுத்தது. பதிலளித்து ஆடிய சிவப்பு அணி 19.4 ஓவர்களில் 159 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது.
சாம்பல் அணியின் மினோத் பானுக அதிகபட்சமாக 74 ஓட்டங்கள் எடுத்தார், கப்டன் தசுன் ஷானக 48 ஓட்டங்களுடனும், நுவனிடு பெர்னாண்டோ 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சிவப்பு அணி சார்பில் அகில தனஞ்சய பந்துவீச்சில் 24 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
சிவப்பு அணி பதிலளித்து ஆட ஆரம்பித்த போது, விக்கெட்டுக்களை மளமளவென இழந்தது.
அந்த அணியில் ஓஷத பெர்னாண்டோ அதிகபட்சமாக 46 ஓட்டங்கள் எடுத்தார். நுவான் பிரதீப், மாதீஷ பத்திரன மற்றும் புலின தரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆஷியன் டானியல், தசுன் ஷானக மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
நேற்றைய ஆட்டத்தில் மினோத் பானுக ஆட்ட நாயகனாக தெரிவானார். தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய, சாம்பல் அணியின் தலைவர் ஷானக தொடர் நாயகன் விருது பெற்றார்.