போர்முடிந்து பன்னிரெண்டு வருடங்களாகியும் இன்னமும் யுத்த சூழல் போன்று தான் வடகிழக்கு காணப்படுகின்றது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிலுள்ள கற்கோவளம் பகுதியில் தீர்த்தக்கரை என்னும் இடத்தில் இராணுவ முகாம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த இராணுவ முகாம் யுத்தம் முடிந்து கடந்த பன்னிரெண்டு வருடங்களாகியும் தொடர்ந்தும் இன்னமும் அந்த இடத்திலே தான் முகாம் இருக்கின்றது. அந்த முகாம் அமைந்திருக்கின்ற பகுதியால் தினமும் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடல்தொழிலுக்கு சென்று வருகிறார்கள்.
அத்தோடு வல்லிபுரத்து ஆழ்வார் கோயிலுக்கும் பல நூற்றுக்கணக்கானவர்கள் சென்று வருவது வழமை. அதனை விட விஷேடமான திருவிழா நாட்களிலே பல்லாயிரக்கணக்கானவர்கள் அவ் வீதிகளை முகாமிருக்கின்ற பகுதியால் சென்று வருவதுண்டு.
அதிலே படையினர் முகாமிட்டிருப்பதாலே பொதுமக்களுக்கு அச்சமான ஒரு நிலை தான் இருக்கின்றது. குறிப்பாக பெண்கள் தனியாக போக்குவரத்து செய்வதிலே ஒரு அச்ச நிலை இருக்கின்றது.
இந்த நிலையில் அந்த முகாமிற்கு என மக்களின் காணியை மக்களினது விருப்பங்களுக்கு மாறாக சுவீகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நான்கு பேருக்கு சொந்தமான நான்கரை காணியை சுவீகரிப்பதற்கு மக்களுக்கு சம்பிரதாய பூர்வமாக கடிதங்களை அனுப்பி விட்டு காணிகளை சுவீகரிப்பு செய்வதற்கு ஈடுபட்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் தான் கடந்த 16 ஆம் திகதி சென்று காணியை அளக்க வரும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தோம். அதிலே சட்டத்தரணி காண்டீபன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
எங்களுடைய எதிர்ப்பினாலே அளக்கின்ற நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது. அந்த பிரதேசம் முழுவதிலும் இருக்கும் மக்கள் அந்த இடத்திலே முகாம் அமைவதனை விரும்பவில்லை.
மக்களுடைய சுதந்திரமான நடமாட்டத்திற்கு இது இடையூறான விடயம்.
அதனைவிட சிறீலங்கா படைகள் தமிழர்களுடைய வாழ்விடங்களிலே இருப்பதனை மக்கள் விரும்பவில்லை. ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது.
மேற்கொண்டு ஏதும் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பின்னரே தான் முடிவெடுக்கப்பட வேண்டும்
இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட கூடாது. அதாவது காணி உரிமையாளர்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக நிர்ப்பந்திக்கப்பட்டு அந்த காணிகளை சுவீகரிப்பதற்கான முயற்சிகள் கூடாதென அந்த இடத்திலே வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
போர்முடிந்து பன்னிரெண்டு வருடங்களாகியும் இன்னமும் யுத்த சூழல் போன்று தான் வடகிழக்கு காணப்படுகின்றது. இலங்கையிலே இருக்கிற 20 டிவிசன் படைகளிலே 16 டிவிசன் படைகள் வடக்கு கிழக்கிலே நிலை கொண்டிருக்கின்றன.
அதிலும் வடமாகாணத்திலே 13 டிவிசன் படைகள் வடமாகாணத்திலே நிலை கொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இராணுவத்திற்காக காணி சுவீகரிக்கின்ற நடவடிக்கைகள் தான் படை தரப்பில் இருந்து அரசாங்க தரப்பில் இருந்து முன்னெடுக்கபடுகின்றது. நாங்கள் இவற்றை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த படைகள் இந்த மண்ணில் இருந்து விலத்தி கொள்ளபட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு என மேலும் தெரிவித்தார்.