இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அக்கடமியில் உள்ள பயிற்சியாளர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. தேசிய கிரிக்கெட் அக்கடமிக்கு பாட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கிற்கு 11 பயிற்சியாளர்கள் உள்ளனர். இவர்களது பதவிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அவர்களுக்கான ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் நீட்டிக்கவில்லை.
இந்தநிலையில் தேசிய கிரிக்கெட் அக்கடமிக்கு பாட்டிங், பந்துவீச்சு (வேகப்பந்து, சுழற்பந்து) மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது. செப்டம்பர் 10-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்ந்து செயல்படுவார்.
ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்கள் மீண்டும் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் பயிற்சியாளர் பொறுப்புக்கு தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என்று தெரிகிறது.