இலங்கை அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இலங்கை அணி சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன், எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன்களையும் திணறடிக்கும் ஆற்றல் மிக்கவர். சர்வதேச கிரிக்கெட்டில் மட்டும் 1347 விக்கெட்களை வீழ்த்தி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
மொத்தம் 19 வருடங்கள் கிரிக்கெட் விளையாடியிருக்கும் இவர், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் குறித்து, தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ளார். அப்போது, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராகப் பந்துவீசுவது குறித்தும் பேசினார்.
முத்தையா முரளிதரன் பேட்டி:
தனியார் பத்திரிகைக்கு பேட்டிகொடுத்த அவர், “சில பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு அதிகமாக தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் காலையில் புத்துணர்வோடு பந்துவீச மைதானத்திற்குள் வரும்போது, விரேந்தர் சேவாக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் எங்களது பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு அபாரமாக விளையாடுவார்கள். சேவாக் தொடர்ந்து அதிரடி காட்டக் கூடியவர். எங்களுக்கு எதிராக இரட்டை சதம் அடித்திருக்கிறார். அவர் செய்யாதது எங்களுக்கு எதிராக முச்சதம் அடிக்காததுதான் ”எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிரையன் லாரா, இந்திய அணியின் விரேந்தர் சேவாகுக்கு எதிராக பந்துவீசுவதுதான் கடினமாக இருந்தது. குறிப்பாக, சேவாக். அவர் மிகவும் ஆபத்தான வீரர். தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும் என்பது அவருடைய ஒரே எண்ணமாக இருக்கும். இதனால், சேவாக்கிற்கு எதிராக பீல்டர்களை தொலைவில் நிறுத்துவோம். நான் எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன்களையும் சமாளித்து விடுவேன். ஆனால், சேவாக்கை சமாளிப்பது சுலபம் இல்லை. இரண்டு மணி நேரம் பேட்டிங் செய்தால், சுலபமாக 150 ரன்களை அடித்துவிடுவார் ”எனக் கூறினார்.
அடுத்து, சச்சின் குறித்துப் பேசிய முரளிதரன், “சேவாக் போல, சச்சின் அதிரடியாக விளையாட மாட்டார். அவருக்கு எதிராக பந்துவீசும்போது, எவ்வித பதற்றமும் இருக்காது. லெக் ஸ்பின்னை ஆடும் அளவுக்கு மேல் ஸ்பின்னை சச்சின் ஆடமாட்டார் ”என முத்தையா முரளிதரன் பேசினார். சச்சின் விக்கெட்டை முரளிதரன் 13 முறை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.