Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

தலிபான் 2.0 வில் மாற்றமில்லை; பழைய வெர்ஷனே: ஐ.நா அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து முழுமையாக 5 நாட்கள் ஆகிவிட்டன. தங்களின் ஆட்சி 1996ல் இருந்ததுபோல் இருக்காது. இஸ்லாமிய சட்டத்துக்கு இணங்க பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்றெல்லாம் கூறினர் தலிபான்கள்.

ஆனால், அங்கு நிலைமை மாறவில்லை எனக் கூறுகிறது ஐ.நா.,வின் ஆராய்ச்சிக் குழு. தலிபான்கள் அச்சுறுத்தல் குறித்து ஐ.நா. சார்பாக நோர்வேஜியன் சென்டர் ஃபோர் குளோபல் அனாலிஸிஸ் இந்த ஆவணத்தை எழுதியுள்ளது.

அதில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள் பின்வருமாறு:

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன் தொடர்பில் இருந்தவர்களை வீடுவீடாகத் தேடிச் செல்கின்றனர் தலிபான்கள். அவர்களுடன் அவர்களின் குடும்பத்தாரையும் குறிவைக்கின்றனர். ஆகையால் அமெரிக்க, நேட்டோ படைகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் கடுமையான துன்புறுத்தலுக்கும், தண்டனைகளுக்கும், ஏன் உயிரிழிக்கும் சூழலுக்கும் ஆளாகும் அபாயம் நிலவுகிறது.

யாரையும் பழிவாங்கமாட்டோம். அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கிறோம். வீரர்கள் தனிப்பட்ட முறையில் யாருடைய வீடுகளுக்குள்ளும் நுழைய மாட்டார்கள் என்றெல்லாம் தலிபான்கள் பிரகடனம் செய்தனர். ஆனால், அதற்கு மாறாகவே நிலைமை இருக்கிறது.

அண்மையில் ஜலாலாபாத்தில் நடந்த போராட்டத்தின் போது பத்திரிகையாளர்களை தடியால் தலிபான்கள் தாக்கினர். காபூலுக்கு வெளியே பிற மாகாணங்களில் தலிபான்களை எதிர்ப்பவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். காபூலில் ஒரு மாதிரியும் பிற இடங்களிலும் குறிப்பாக மொழிவாரியான சிறு குழுக்கள் மத்தியிலும் தலிபான்கள் இன்னமும் பழைய முகத்துடனேயே இருக்கின்றனர்.

1990களில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியபோது, பெண்களுக்கு பொதுவாழ்வு என்பது மறுக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு பெண்கள் செல்ல முடியவில்லை. திருமணத்தைத் தாண்டிய உறவில் ஈடுபட்டால் கல்லால் அடித்துக் கொல்லை. இசைக்கு அனுமதி கிடையாது. தொலைக்காட்சி வைத்திருக்கவே கூடாது என்ற நிலைதான் இருந்தது. இவையெல்லாம் இனியும் இருக்காது என்றனர் தலிபான்கள்.
ஆனால், ஆப்கனின் பெண் பத்திரிகையாளர் ஷப்ணம் தாவ்ரன் கூறுகையில், எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அலுவலகத்துக்குள் ஆண் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நான் சென்றபோது, இனி நீங்கள் இங்கே வேலை பார்க்க முடியாது, அரசு நடைமுறைகள் மாறிவிட்டன என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். தலிபான்களுக்கு எதிராக பேரணி சென்றவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நான் சர்வதேச சமூகத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். 20 ஆண்டுகளாக ஏற்பட்ட மாற்றங்கள் வீணாகாமல் கவனித்துக் கொள்ள வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா.,வின் அச்சுறுத்தல் கண்டறியும் குழு, தலிபான்கள் 2.0 மாறவில்லை என்பதை பொதுவாதமாக வைத்துள்ளது.

ரஷ்யாவின் கணிப்பு:

தலிபான்கள் தங்களுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என்று கணித்துவிட வேண்டாம் என ரஷ்யா எச்சரித்துள்ளது. பாஞ்ஷிர் பள்ளத்தாக்கில் ஆப்கனின் துணை ஜனாதிபதி அம்ருல்லா சாலேவும், அகமது மசூதும் வலுவான நிலையில் உள்ளனர். ஆகையால், தலிபான்கள் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கட்டுப்படுத்த முடியாது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அகமது மசூத், தனது தந்தையின் வழியைப் பின்பற்றி தலிபான்களை எதிர்க்கத் தயாராக இருப்பதாகவும் அதற்காக கூடுதல் ஆயுதங்களை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

இனி அமெரிக்காவின் இடத்தை நாம் தீர்மானிக்க வேண்டும்!

Pagetamil

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!