10 நாட்கள் நடைபெறும் ஓணம் பண்டிகையில், மலர்களுக்கு மிகவும் முக்கியமான இடம் உண்டு. மலர்களால் அலங்கரிக்கப்படும் கோலங்களுக்கு ‘அத்தப்பூ கோலம்’ என்று பெயர். இந்தக் கோலத்தை போடுவதற்கு ஒரு நடைமுறை உள்ளது. இந்த காலகட்டத்தில் அதை அதிகம் பேர் கடைப்பிடிப்பதில்லை என்றாலும் சிலர் அதை முறையாக செய்துவருகிறார்கள்.
அதாவது மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூக் கோலம் போடப்படும். ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதனால் ஓணத்தை அப்பகுதி மக்கள், ‘பூக்களின் திருவிழா’வாகவும் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவார்கள். பூக்கோலத்தில் அதைத் தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவார்கள். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று என்று தொடரும் இந்த பூக்கோலம், 10-ம் நாளில் பத்து வகையான பூக்களால் அழகுபடுத்தப்படும்.
‘கானம் விற்றாவது ஓணம் உண்’ என்பது பழமொழி. இதற்கு ஏற்றவாறு, ஓணம் பண்டிகையில் உணவுக்கும் முக்கியமான இடம் அளிக்கப்படுகிறது. 10 நாள் விழாவில், 4-வது நாளில் ‘ஓணம் சத்யா’ என்ற பெயரில் ஒரு உணவுத் திருவிழாவே நடத்தப்படும். இந்த நிகழ்வில் அனைத்து சுவைகளிலும் உணவு பதார்த்தங்கள் செய்யப்படும். குறைந்த பட்சம் 64 வகையான உணவுகளை தயாரிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு, முதலில் இறைவனுக்கு படைத்து வழிபடுவார்கள். பின்னர் அவை மக்களுக்கு பரிமாறப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் போன்றவற்றின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். இப்படி வகை வகையாக சாப்பிடும் உணவு பதார்த்தங்கள் செரிமானம் ஆவதற்காகத்தான், உணவில் இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி போன்றவை சேர்க்கப்படுகின்றன.
மலையாளத்தில் ‘களி’ என்பது நடனத்தைக் குறிக்கும். பெரும்பாலானவர்களுக்கு ‘கதகளி’ என்ற வார்த்தை தெரிந்திருக்கும். தமிழ்நாட்டில் கூத்துக்கட்டும் போது போடப்படும் ராஜா – ராணி வேடங்களைப் போலத்தான் என்றாலும், அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஆண், பெண் போல வேடமிட்டு, முகம் முழுவதும் வண்ண வண்ண நிறங்களை பூசி அந்த ஆட்டத்திற்கு தங்களை அழகுபடுத்துவார்கள். இது தவிர ‘புலிக்களி’ அல்லது ‘கடுவக்களி’ என்று அழைக்கப்படும் நடனமும் ஓணம் பண்டிகையில் மிகவும் பிரபலம். இந்த நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி ஊர்வலமாக வருவார்கள். புலிக்களி நடனம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்பவரால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.
இது தவிர கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனம் என 10 நாட்களும் பல போட்டிகள் நடத்தப்படும். இதில் படகுப்போட்டியின் போது அனைவரும் மலையாள பாடலை பாடியபடி துடுப்பை செலுத்துவார்கள்.