பெரும்பாலான இயற்கை பிரச்சினைகளுக்கு வீட்டிலேயே அதிலும் உணவு மூலமே தீர்வு கண்டவர்கள் நம் முன்னோர்கள். மூலம் உள் மூலம், வெளி மூலம் என எந்த மூலம் வந்தாலும் அவை உபாதைதான் உண்ணும் உணவுகள் செரித்து சத்துக்கள் உடலில் உறிஞ்சப்பட்டு எஞ்சிய கழிவுகள் வெளியேற்றப்பட்டு விட்டாலே உடலின் பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். செரிமானத்தின் ஆரோக்கியமான இறுதி படி மலம் கழித்தல், மலம் கழித்தலில் சிக்கல் என்பது நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சினைகளை உண்டாக்கும். இது தான் மூலநோயாக உருவெடுக்கிறது. இந்த மூலப்பிரச்சினைக்கு வெள்ளை வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
மூல நோய் ஆசன வாயில் அழுத்தம் ஏற்பட்டால் இந்த தசைப்பகுதி வீக்கம் அடையும். இந்த வீக்கமே மூலம் என்று அழைக்கப்படுகிறது. மூலம் கவனிக்காமல் விட்டால் அது ஆசன வாய் பகுதியில் வெடிப்பை உண்டாக்கி இரத்தம் கசியவும் வாய்ப்புள்ளது. நாள்பட்ட மலச்சிக்கல் வரும் போதே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் மலசிக்கலால் அதிக அழுத்தம் கொடுத்து மலம் கழிக்கும் போது அது மூல நோயை உண்டாக்குகிறது. ஆசன வாய் சுற்றி எரிச்சல், அரிப்பு, வலி. இரத்தக்கசிவு மற்றும் அடைப்பு இருக்கலாம். இதே போல ஆசன வாய் பகுதிகளில் சிலருக்கு புண் உண்டாகலாம்.
இதை தான் பவுத்திரம் என்கிறோம். மூலம், இரத்தபோக்கு இவற்றை சரியாக்க வெள்ளை வெங்காயம் உதவலாம். இந்த வெள்ளை வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது எதனுடன் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
மூலத்துக்கு வெள்ளை வெங்காயம்
வெள்ளை வெங்காயம் எடுத்து ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கவும். இதை நெய் விட்டு வாணலியில் வதக்கவும். நன்றாக பொன்னிறமாக வதங்கும் போது பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து நன்றாக கிளற வேண்டும். பிறகு இறக்கி ஆறியதும் இளஞ்சூட்டில் இருக்கும் போது அதில் பாதி அளவு எடுத்து நன்றாக மென்று சாப்பிடவும். மீதி பாதி அளவு எடுத்து வைத்து மறுநாள் சாப்பிட வேண்டும்.
எப்படி எடுத்துகொள்வது
வெள்ளை வெங்காயம் ஆரோக்கியம் தரக்கூடியது. இதை எல்லாவயதினரும் எடுத்துகொள்ளலாம். குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் இருந்தால் இதை கொடுக்கலாம். அனைத்து வயதினரும் தயக்கமில்லாமல் இதை எடுத்துகொள்ளலாம். தொடர்ந்து ஒரு வாரம் வரை எடுத்துகொள்ளுங்கள். 5 நாட்களிலேயே பலன் தெரியும். இதை சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் சில மணி நேரங்கள் வேறு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ வேண்டாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு இனிப்பு அதிகமாக சேர்த்து கொடுங்கள். இது ஆரம்ப கட்ட மூலம், பவுத்திரம் இரத்தப்போக்கு போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.