ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தஞ்சமடைந்துள்ளமை உறுதியாகியுள்ளது. அஷ்ரப் கானி குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசியல் தஞ்சமளித்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், முதன்முறையாக பேசிய அஷ்ரப் கானி, தன்னுடைய வெளியேற்றத்தின் மூலம் காபூலில் இருந்து இரத்தம் சிந்துவதைத் தடுத்ததாகக் கூறினார். மேலும் அவர் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறியபோது தன்னுடன் பெரிய தொகையை எடுத்துச் சென்றதாக கூறப்படுவதையும் மறுத்தார்.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, தான் சூட்கேஸ்களுடன் தப்பிச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், இது அனைத்தும் “அரசியல் மற்றும் ஆளுமை படுகொலை” என்றும் கூறினார்.
“சுங்க அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளிடமிருந்து அவர்களின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.
தலிபான் படைகள் ஞாயிற்றுக்கிழமை காபூலுக்குள் நுழைந்தபோது, திடீரென நாட்டை விட்டு வெளியேறியதற்காக முன்னாள் அமைச்சர்களால் கானி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
கானி புதன்கிழமை பேஸ்புக்கில் ஸ்ட்ரீம் வீடியோவில் வெளியிட்ட செய்தியில், “நான் தங்கியிருந்தால், காபூலில் இரத்தம் சிந்துவதை நான் பார்த்திருப்பேன்” என்றார்.
அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அவர் வெளியேறினார்.
“காபூலை மற்றொரு யேமன் அல்லது சிரியாவாக அதிகாரப் போட்டிக் களமாக மாற்றக்கூடாது, அதனால் நான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று கானி கூறினார்.
அவர் மில்லியன் கணக்கான டொலர்களுடன் நாட்டை விட்டு வெளியேறிய செய்திகளை மறுத்தார்.
“நான் ஒரு கோட் மற்றும் சில ஆடைகளுடன் கிளம்பினேன். எனது மடிக்கணினி, குறிப்பு புத்தகத்தை கூட எடுத்துச் செல்லவில்லை. எனக்கு எதிரான ஆளுமை படுகொலை நடந்து வருகிறது, நான் என்னுடன் பணம் எடுத்துவிட்டேன் என்று கூறினார்கள். குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற பொய்கள். நீங்கள் சுங்க அதிகாரிகளிடம் கூட கேட்கலாம் – அவர்களிடம் உண்மையை அறியலாம்“ என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானிலிருந்து கானி வெளியேறிய பின்னர், நேற்று புதன்கிழமை வரை ஜனாதிபதியின் இருப்பிடம் பற்றிய தகவல் மர்மமாகவே அருந்தது. அவர் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அல்லது ஓமானுக்கு தப்பிச் சென்றார் என்ற ஊகங்கள் இருந்தன.
முன்னதாக புதன்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு அமைச்சக அறிக்கையில், கானி மற்றும் அவரது குடும்பத்திற்கு “மனிதாபிமான அடிப்படையில்” அரசியல் தஞ்சமளித்ததை உறுதி செய்தது.
முன்னதாக தஜிகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர், கானி அரசு நிதியில் இருந்து 169 மில்லியன் டொலர் திருடியதாக குற்றம் சாட்டியதுடன், அவரை கைது செய்ய சர்வதேச போலீஸை கோரினார்.
தூதர் முகமது ஜாஹிர் அக்பர் புதன்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார், “கானி அரசு திறைசேரியிலிருந்து 169 மில்லியன் டொலர்களைத் திருடினார். அவரது தப்பித்தல் அரசுக்கும், நாட்டுக்கும் செய்த துரோகம்” என்று கூறினார்.
கானி வெளியிட்ட வீடியோவில், ‘நான் நாடு திரும்புவதற்கான ஆலோசனையில் இருக்கிறேன்’ என்றார்.
தலிபான்களுக்கும் முன்னாள் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிப்பதாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்த பின்னர் வீடு திரும்புவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கானி தனது நேரடி உரையில் கூறினார்.
அப்துல்லா அப்துல்லா மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு முயற்சியை நான் ஆதரிக்கிறேன். இந்த செயல்முறையின் வெற்றியை நான் விரும்புகிறேன், “என்று அவர் கூறினார்.
“நான் ஆப்கானிஸ்தானுக்கு திரும்புவதற்கான ஆலோசனையில் இருக்கிறேன், இதனால் நீதி, உண்மையான இஸ்லாமிய மற்றும் தேசிய விழுமியங்களுக்கான முயற்சிகளைத் தொடர முடியும்.” என்றார்.
1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் நடந்த முந்தைய தலிபான் ஆட்சியை அங்கீகரித்த மூன்று நாடுகள் சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும்.