பட்டியல் இனத்தவரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன், சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, வீடியோவை வெளியிட உதவியதாக அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் வசிப்பவர் நடிகை மீரா மிதுன். மிஸ் தென் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உள்ளிட்ட அழகிப் பட்டங்களை வென்றவர். மேலும், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய திரைப்படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்திய பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு, பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், நடிகை மீரா மிதுன் அண்மையில் யூ-டியூப்பில் பதிவிட்டிருந்த வீடியோவில், பட்டியல் இனத்தவர் குறித்தும், அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் குறித்தும் இழிவான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலர் வன்னியரசு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 7-ம் தேதி புகார் அளித்தார்.
இதையடுத்து, இந்திய தண்டனை சட்டம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சைபர் க்ரைம் போலீஸார் மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
மேலும், போலீஸாருக்கு சவால் விடும் வகையில், மற்றொரு வீடியோவையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, அவரைக் கைது செய்ய, சென்னை மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த மீரா மிதுன் என்ற தமிழ்ச் செல்வியை கடந்த 14-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீஸாரின் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். வரும் 27-ம்தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, மீரா மிதுன் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், மீரா மிதுனின் நண்பரான, அம்பத்தூரைச் சேர்ந்த சாம் அபிஷேக்கையும் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். மீரா மிதுனின் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட உடந்தையாக இருந்ததாகக் கூறி அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.