மலேசிய பிரதமர் பதவிவிலகினார்!

Date:

மக்களவையில் பெரும்பான்மையை இழந்திருப்பதை அடுத்து, அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்ப தாம் பதவி விலகியிருப்பதாக மலேசிய பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அம்னோவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிக்காத்தான் நெஷனல் அரசாங்கத்துக்கான ஆதரவை மீட்டுக் கொண்டதோடு, அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயல்படுமாறு விடுக்கப்பட்ட அழைப்பையும் எதிர்கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, நாடாளுமன்றத்தில் தாம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படாமல் போனதாக முஹிடின் குறிப்பிட்டார்.

அதையடுத்து, அரசியலமைப்பின் 43வது விதியின் 4வது பிரிவுக்கு ஏற்ப, இன்று நண்பகல் பேரரசரைச் சந்தித்து தமது பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாக, இன்று மாலை மணி 3 நேரலையாக ஒளிபரப்பாகிய சிறப்பு உரையின்போது டான் ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

இதனிடையே, தாம் பதவி விலகினாலும், கோவிட் பெருந்தொற்றிலிருந்து மக்களையும் நாட்டையும் மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் தேசிய கோவிட் தடுப்பூசி திட்டம் எந்தவோர் இடையூறும் இன்றி சுமூகமாக மேற்கொள்ளப்படுமென அவர் உறுதியளித்தார்.

அதற்கு போதுமான கோவிட் தடுப்பு மருந்தை அரசாங்கம் ஏற்கனவே கொள்முதல் செய்து விட்டதால் மக்கள் ஐயம் கொள்ளத் தேவையில்லை எனவும் முஹிடின் குறிப்பிட்டார்.

2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அரசாங்கம் கவிழ்ந்திருப்பது இது இரண்டாவது முறையாகும்.

அத்துடன் நீடித்த அதிகாரப் போராட்டத்திற்கு மத்தியில், 17 மாதங்கள் குறுகிய காலம் பிரதமராக நாட்டை வழிநடத்தியவராகவும் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் திகழ்கிறார்.

அம்னோ, பாஸ் உட்பட மேலும் ஐந்து அரசியல் கட்சிகளின் கூட்டணியுடன், பெர்சார்த்து கட்சியின் தலைவராக டான் ஶ்ரீ முஹிடின் யாசின் மலேசியாவின் எட்டாவது பிரதமராக, கடந்தாண்டு பெப்ரவரியில் பதவியேற்றார்.

கோவிட் பெருந்தொற்று நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் தலைமைப் பொறுப்பை முஹிடின் ஏற்ற வேளை, அப்பெருந்தொற்றை முறையாக கையாளவில்லை என அவரது அரசாங்கம் பெரிதும் குறை கூறப்பட்டது.

இந்நிலையில், கோவிட் பெருந்தொற்றால் மக்கள் படும் இன்னல்களைக் களைய சீரிய முயற்சிகளை எடுக்க தவறியதாகவும், அத்தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட அவசர கால சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், முஹிடின் மீது அம்னோ குற்றச்சாட்டை முன் வைத்தது.

அதைத் தொடர்ந்து, ஜூலை 7ஆம் திகதி அம்னோ , பெரிக்காத்தான் நெஷனல் அரசாங்கத்துக்கான ஆதரவை அதிகாரப்பூர்வமாக விலக்கிக் கொண்டது.

அந்த முடிவு முஹிடின் அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்ததோடு, பெரும்பான்மையை அவர் இழந்து விட்டதாகவும் அவருக்கு நெருக்குதல் தர தொடங்கப்பட்டது.

மேலும், அண்மையில், மக்களவையில் அவசர காலத்தின் சட்டங்கள் முன்கூட்டியே மீட்டுக் கொள்ளப்பட்டதாக செய்யப்பட்ட அறிவிப்பினால் பேரரசரும், முஹிடின் தரப்பும் முரண்பாடான தகவல்களை வெளியிட்டதை அடுத்து, பிரதமர் பதவி விலக வேண்டுமென நெருக்குதல் பல தரப்புகளில் இருந்து வலுக்கத் தொடங்கியது.

இன்று பிரதமராக தாம் பதவி விலகினாலும், அரசாங்கப் பணத்தை முறைகேடு செய்தவர்களுடன் தாம் ஒருபோதும் ஒத்துழைப்பதில்லை எனும் கொள்கையிலிருந்து மாறப் போவதில்லை என டான் ஶ்ரீ முஹிடின் யாசின் கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்