நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதிலும் உள்ள தீவுகளில் தேசியக்கொடிகளை ஏற்றி கொண்டாடுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. அதன்படி நேற்று முதல் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. கோவா மாநிலத்திற்கு உட்பட்ட சாவோ ஜசின்டோ தீவில் கடற்படை சார்பில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் இதற்கு உள்ளூர் மக்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கொடியேற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த தகவலை அறிந்த முதல்வர் பிரமோத் சாவந்த், திட்டமிட்டபடி சாவோ ஜசின்டோ தீவில் தேசியக்கொடியை ஏற்றும்படி கடற்படை அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தீவில் எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். தேச விரோத நடவடிக்கைகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என அவர் கூறி உள்ளார்.



