ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரம் தலிபான்களால் தனிமைப்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காபூல் நகரின் எல்லை வரை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். இதனால் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களிடம் உள்ள இரகசிய ஆவணங்களை உடனடியாக அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள். கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 7 மாகாணங்களைக் கைப்பற்றியுள்ளனர். குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 20 மாகாணங்கள் தலிபான்கள் வசம் சென்றுள்ளன. அந்நாட்டிலேயே 2வது மிகப்பெரிய நகரம் காந்தகார். அந்த நகரையே தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தலிபான்கள் ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியாமல் ஆப்கன் அரசு திணறிவருகிறது. அங்குள்ள அரசு அதிகாரிகள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில், சாலை மார்க்கமாகவும், விமானம் மூலமும் அங்கிருந்து தப்பி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள காவல் நிலையங்கள் காலியாக இருப்பதால் காவல்துறையினர் தங்கள் பாதுகாப்பு கருதி ஆயுதங்கள், வெடி பொருட்களுடன் வெளியேறுகிறார்கள்.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரம் தலிபான்களால் சூழப்படுகிறது. த வசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. காபூல் நகரின் எல்லை வரை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். இதனால் வெளிநாட்டு தூதரகங்கள் காபூல் நகரை காலி செய்து விட்டு தங்கள் நாட்டுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீட்டின்படி ஒரு மாதத்தில் காபூல் தனிமைப்படும், 3 மாதங்களில் தலிபான்களின் வசமாகிவிடும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், புதிய நிலவரப்படி, 72 மணித்தியாலத்தில் காபூல் தனிமைப்படுத்தப்படும் என தெரிகிறது.
ஊடகத் துறையினர், சர்வதேச அமைப்பினரும் பாதுகாப்பாக ஆப்கானிலிருந்து வெளியேற உதவி கோரி வருகின்றனர்.
காபூலில் இருந்து இந்திய தூதரக ஊழியர்கள் வெளியேறுவதற்காக உரிய ஆவணங்களையும் மற்றவைகளையும் ஆப்கன் அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
தலிபான்களால் வன்முறை அதிகரித்ததை அடுத்து மசார் இ ஷெரீப்பில் உள்ள தூதரகத்திலிருந்து அதிகாரிகளை வெளியேற்றும் பணியில் இந்தியா கடந்த வாரமே ஈடுபட்டது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் நெருங்கினால் அங்குள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற போதிய படைகளை காபூலுக்கு அனுப்ப அமெரிக்கா தயாராகி வருகிறது. இதுமட்டுமின்றி அங்குள்ள அமெரிக்கர்களை பத்திரமாக கொண்டு வந்த சேர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களிடம் உள்ள இரகசிய ஆவணங்களை உடனடியாக அழித்து விடுவிட்டு, பொருட்களுடன் அமெரிக்கா திரும்புமாறும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆவணங்கள், பைல்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.
அதுபோலவே பிரிட்டனும் தங்கள் நாட்டினரை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.