குற்றம் நடந்தால் அதை மறைக்க முடியாது. குற்றவியல் வழக்குகளின் வரலாறு அதைத்தான் நிரூபிக்கிறது. அப்படியான இன்னொரு சம்பவம்தான், யாழ்ப்பாணம் கோண்டாவிலை சேர்ந்த 20 வயதான பரமேஸ்வரன் சஜிந்திகாவும், அவரது 6 மாத குழந்தையும் கொலை செய்யப்பட்ட சம்பவம்.
6 வருடங்களில் எல்லோரும் மறந்து விட்டனர், எல்லா தடயமும் மறைந்து விட்டது என சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்த கொலையாளி கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலித்து, கர்ப்பமாக்கி, குழந்தை பிரசவித்த பின்னர், திருமணம் செய்வதாக கூறி அழைத்து சென்று, தாயையும், பிள்ளையையும் கொன்ற அந்த கொடூரன் வவுனியாவில் கைது செய்யப்பட்டார்.
வவுனியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமை ஆய்வாளர் அசங்க இந்துனில் பண்டார ஏக்கநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரின் விசாரணையை தொடர்ந்து, கடந்த 7 ஆம் திகதி காலையில் கொலையாளி கைதானார்.
வவுனியா கோவில்புதுக்குளத்தில் வசிக்கும் 28 வயது மனோராஜ் என்பவரே கைதானார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசரணையில், 2015 ஓகஸ்ட் 9ஆம் திகதி இரவு 9 மணியளவில் சஜிந்திகாவும், 6 வயது மகளும் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டார். கொலைக்கான காரணங்களையும், சம்பவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் மனதை பறிகொடுத்து, தனதும், 6 மாத குழந்தையினதும் உயிரை பறிகொடுத்த அந்த அப்பாவி இளம்பெண்ணின் சோகக்கதையை தருகிறோம்.
யாழ்ப்பாணம், கோண்டாவிலை சேர்ந்தவர் பரமேஸ்வரன் சஜிந்திகா. அவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார்.
அந்த காலகட்டத்தில், வடக்கு புகையிரத மார்க்க புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன. இந்த பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தக்குழு ஒன்று கோண்டாவிலில் தங்கியிருந்தது. அதாவது, சஜிந்திகாவின் வீட்டிற்கு அருகில். அந்த குழுவில் வவுனியாவை சேர்ந்த மனோராஜூம் இருந்தார். அவருக்கு அப்போது 21 வயது.
மனோராஜூக்கு இரண்டு அக்காக்களும், இரண்டு தங்கைகளும் இருந்தனர். அவர்தான் குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளை. பொறுப்பாக குடும்பத்தை கவனிக்க வேண்டியவர், அதை மறந்ததால் இரண்டு கொலைகள் நடந்துள்ளன. அவர் சட்டத்தின் நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.
கோண்டாவிலில் பணிபுரிந்த போது, வீதியில் செல்லும் சஜிந்திகாவிற்கு பகிடி விட்டு… சிரித்து… போன் நம்பர் கொடுத்து என ஒரு விடலைக் காதலிற்கான எல்லா அம்சங்களுடனும் அவர்களின் காதல் மலர்ந்தது.
அருகருகே தங்கியிருக்கிறார்கள்… விடலை வயது. சில நாட்களிலேயே திகட்டத்திகட்ட காதலித்தனர். விளைவு… சஜிந்திகா கர்ப்பமாகினார்.
தான் கர்ப்பமான விடயத்தை தெரிந்து கொண்ட சஜிந்திகா, அதை காதலனிடம் கூறி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.
அப்பொழுதுதான், காதலனின் சுயரூபம் அவருக்கு புரிந்தது. தான் காதலன் என நம்பியவன், கோண்டாவிலில் தங்கியிருக்கும் வரைதான் தன்னை காதலியாக பயன்படுத்த நினைத்தான் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
விடயம் வீட்டுக்கு தெரிய வந்தது. அப்போது சஜிந்திகா சில மாத கர்ப்பிணியாக இருந்தார். திருமணம் செய்ய மறுக்கும் காதலன்… திருமணத்திற்கு முன்னரே கர்ப்பிணியான மகளால் ஏற்படப் போகும் சமூக அவமானம் என எல்லாவற்றையும் கணக்கிட்ட பெற்றோர், கிளிநொச்சியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் சஜிந்திகாவை தங்க வைத்தனர்.
அங்கு அவருக்கு பிரசவமானது.
வவுனியாவிலுள்ள மனோராஜூடனும், உறவினர்களுடனும் சஜிந்திகா, பெற்றோர் தரப்பினர் தொடர்ந்து பேசினர். பலனல்லை. ஒருநாள் தனது தந்தையையும் அழைத்துக் கொண்டு, வவுனியாவிலுள்ள மனோராஜின் வீட்டுக்கு சஜிந்திகா சென்றார்.
மனோராஜின் தாய் மற்றும் சகோதரிகள் அங்கிருந்தனர். தனது காதல் கதையை கூறி, தனது குழந்தைக்கு மனோராஜே தந்தையென்பதை கூறினார். எனினும், மனோராஜ் வீட்டார் அந்த கதையை கேட்க தயாராக இருக்கவில்லை.
“இந்த கதையையெல்லாம் எங்களிடம் வந்து சொல்ல வேண்டாம். வேறெங்காவது போய் கூறிக்கொள்ளுங்கள்“ என முகத்திலடித்தாற் போல சொல்லியனுப்பி விட்டனர்.
இதையடுத்து, சஜிந்திகா வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு பதிவு செய்தார். பொலிசார் மனோராஜை அழைத்து விசாரித்தனர்.
சஜிந்திகாவை ஏமாற்ற முடியாதென்பதை தெரிந்து கொண்ட மனோராஜ், அவரையே திருமணம் செய்வதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, சஜிந்திகாவும் குழந்தையும் கோண்டாவில் சென்றனர். தனது குழந்தைக்கு தந்தையாக இருப்பது வருங்கால சட்டபூர்வ கணவனே என்ற நம்பிக்கை- ஊர் வாயை அடைக்கும் என்பதால் ஊருக்கு சென்றார்.
கோண்டாவில் சென்ற மனோராஜ், வவுனியாவிற்கு சஜிந்திகாவை அழைத்து செல்வதாகவும், அங்கு திருமணம் செய்வதாகவும் கூறினார். இதுவரை திருமணம் செய்யாவிட்டாலும், திருமணம் செய்து ஒரு கணவனாக தமது மகளை நன்றாக கவனித்துக் கொள்வார் என நம்பி, சஜிந்திகாவை காதலனிடம் ஒப்படைத்தனர் பெற்றோர்.
2015 ஓகஸ்ட் 9ஆம் திகதி மாலை அந்த காதல் ஜோடியும், 6 மாத குழந்தையும் யாழ் நகரிலிருந்து பேருந்தில் வவுனியாவிற்கு புறப்பட்டனர்.
வவுனியா நகரத்தில் அவர்கள் பேருந்திலிருந்து இறங்கியதும், மனோராஜ் ஒரு கடையில் ஒரு பொரிஅரிசி பக்கெட், இரண்டு பியர், சிகரெட் மற்றும் மூன்று மெழுகுவர்த்திகளை வாங்கினார்.
அங்கிருந்து, வவுனியா, முருகனூரில் உள்ள ஆட்களற்ற வீடொன்றிற்கு சென்றனர். அதுவும் மனோராஜ் குடும்பத்துடன் தொடர்புடைய வீடுதான். அங்கு மின்சார இணைப்பு இல்லை. இதனால் 3 மெழுகுவர்த்திகள் வாங்கியிருந்தார்.
அந்த வீட்டில் மனிதர்கள்- குறிப்பாக கைக்குழந்தையுடன் வாழ்வதற்கான எந்த வசதியும் இல்லை. வீட்டு பாவனைப் பொருட்களும் இல்லை. இரவில் அந்த வீட்டுக்குள் நுழைந்த சஜிந்திகாவிற்கு ஏமாற்றம். குடும்பத்தை தங்க வைக்க முறையான ஏற்பாடு எதுவுமின்றி மனோராஜ் அழைத்துவந்ததை புரிந்து கொண்டார்.
தரையில் ஒரு பெட்சீற் விரிக்கப்பட்டு, குழந்தை படுக்க வைக்கப்பட்டது.
மனோராஜ் பியர் குடித்தார். இரவு உணவாக பொரி அரசி மாவை மனைவியுடன் பகிர்ந்து கொள்ள தயாரான போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மனைவியை கடுமையாக தாக்கினார்.
தான் அடித்த போது, சுவரில் அடிபட்டு சஜிந்திகா உயிரிழந்ததாக பொலிசாரிடம் மனோராஜ் வாக்குமூலமளித்துள்ளார்.
மனைவியை அடித்த சமயத்தில் அவரது காலில் குழந்தை மிதிபட்டுள்ளது. அதை கவனிக்கும் மனோநிலையில் மனோராஜ் இருக்கவில்லை. மனைவி மீதான வெறுப்பும், மதுபோதையுமே நிறைந்திருந்தது.
சஜிந்திகாவை கொல்வதற்காகத்தான் திட்டமிட்டு அந்த வீட்டிற்கு மனோராஜ் அழைத்து வந்தாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
சஜிந்திகா கொல்லப்பட்ட பின்னர், வீட்டிலிருந்து 20 மீட்டர் தொலைவில் உள்ள குப்பை குவியலில் கொண்டு சென்று வீசினார். மண்ணெண்ணெய், சீனி, மற்றும் தென்னம்மட்டைகள் போட்டு சஜிந்திகாவின் உடலுக்கு தீ வைத்தார்.
வேண்டாத மனைவியை கொன்று, தீ வைத்தாயிற்று. இனி பிள்ளை மட்டும் எதற்கு?
அந்த இரவில் கொடூர மிருகமாக செயற்பட்ட மனோராஜ் அடுத்து எடுத்த முடிவும் குரூரமானது.
6 மாத குழந்தையை அருகிலுள்ள சிவன் கோயில் வாசலில் வைத்து விட்டு வருவதென முடிவு செய்தார்.
குழந்தையை தூக்கிக் கொண்டு வீதிக்கு வந்து, முச்சக்கர வண்டியில் கோயிலுக்கு சென்றார். பின் இரவில் கைக்குழந்தையுடன் எங்கு செல்கிறீர்கள் என முச்சக்கர வண்டி சாரதி கேட்டுள்ளார்.
மனைவி சண்டையிட்டுக் கொண்டு சென்று விட்டார். அவரை பார்க்கச் செல்கிறேன் என சமாளித்துக் கொண்டார்.
முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி கோயிலுக்கு நடந்து சென்றார். கோயில் வாசலில் குழந்தையை படுத்தும் போதுதான் கவனித்தார்- குழந்தையிடமிருந்து எந்த அசைவுமில்லை. சத்தமும் இல்லை. அதன் பின்னர் சந்தேகமடைந்து குழந்தையை பரிசோதித்தார். குழந்தை உயிரிழந்திருந்தது.
மனைவியை அடித்து கொல்லும் போது, குழந்தை காலில் மிதிபட்டதை அதன் பின்னர்தான் அவர் நினைத்துப் பார்த்தார். அப்பொழுது குழந்தை இறந்திருக்கலாம்.
குழந்தையை தூக்கிக் கொண்டு வீதிக்கு வந்த மனோராஜ், இன்னொரு முச்சக்கர வண்டியில் ஏறி முருகனூர் வீட்டுக்கு வந்தார். இதற்குள் சஜிந்திகாவின் உடல் பெருமளவில் எரிந்திருந்தது. அதே நெருப்பில் குழந்தையையும் வீசினார் அந்த கொடூர தந்தை.
அந்த வீட்டிலேயே சிறிதுநேரம் மனோராஜ் தங்கியிருந்தார். மனைவி, பிள்ளையின் உடல்கள் எரிந்ததும், அவற்றின் எச்சங்களை நிலத்தில் புதைத்தார்.
பின்னர் வவுனியா நகரத்திற்கு சென்றார். நள்ளிரவிலேயே கொழும்பிற்கு புறப்பட்டார்.
கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்த பின்னர், வவுனியாவிலுள்ள தாயார் வீட்டுக்கு திரும்பி வந்தார். அதன் பின்னர் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தார். ஆனால் வவுனியாவில் தங்குவதை குறைத்துக் கொண்டார்.
இதற்குள், சஜிந்திகாவை தொடர்பு கொள்ள பெற்றோர் முயன்றனர். முடியவில்லை. மனோராஜூம் பதிலளிப்பதில்லை. அவர் வேறொரு இலக்கத்திற்கு மாறி விட்டார்.
சஜிந்திகாவிற்கு என்ன நடந்ததென்பதை தெரியாத பெற்றோர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர். மனோராஜூடனான உறவு குறித்தும் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, வவுனியா பொலிசார் மனோராஜை விசாரணைக்கு அழைத்தனர்.
ஆனால், கில்லாடியான மனோராஜ் ஏதுவும் அறியாத அப்பாவியை போல நடித்து எல்லோரையும் ஏமாற்றினார்.
“நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு பேருந்தில் வந்து கொண்டிருந்த போது, என்னுடன் சண்டையிட்ட சஜிந்திகா, கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து இறங்கிச் சென்று விட்டார். அவருக்கு கிளிநொச்சியில் ஒரு தொடர்பு இருக்க வேண்டும்“ என அப்பாவியாக கூறினார்.
அதற்கு மேல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சஜிந்திகா கிளிநொச்சியில் எங்காவது, தனியாகவோ, கூட்டாகவோ வாழ்கிறார் என எல்லோரும் நினைத்தனர்.
மனோராஜ் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். பின்னர் இரண்டு முறை டுபாய்க்கு சென்று வந்தார். நாட்டுக்கு வந்த பின்னரும் வவுனியா வருவது அரிது. கொழும்பில் இருந்தார்.
கடந்த ஆண்டு, தலைமை ஆய்வாளர் அசங்க இந்துனில் வவுனியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய OIC ஆக நியமிக்கப்பட்டார். வவுனியா எஸ்எஸ்பி திஸ்ஸ லால், சஜிந்திகா காணாமல் போனது தொடர்பாக ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, டிஐஜி லால் செனவிரத்ன மற்றும் வவுனியா பிரிவு பொறுப்பாளர் எஸ்எஸ்பி திஸ்ஸ லால் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், வட மாகாணத்தின் பொறுப்பான மூத்த டிஐஜி ஜெகத் பலிஹக்காரவின் மேற்பார்வையின் கீழ், வவுனியா பொலிசார் முழுமையான விசாரணையைத் தொடங்கினர்.
முதற்கட்டமாக சஜிந்திகாவின் தொலைபேசி இலக்கத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட போது சஜிந்திகா பயன்படுத்திய தொலைபேசியை பொலிசார் அடையாளம் கண்டனர். அனுராதபுரத்தில் வெல்டிங் வேலை செய்யும் ஒரு தமிழர் அதை பாவித்து வந்தார்.
அவரிடம் விசாரித்ததில், அவர் வேறொருவரிடம் தொலைபேசியை வாங்கியது தெரிய வந்தது. அந்த நபரிடம் விசாரித்தால், அவர் இன்னொருவரை கைகாட்டினார். இப்படியே சங்கிலி கோர்வையாக பல கைகள் காட்டப்பட்டு, இறுதியில் அது மனோராஜில் போய் நின்றது.
சஜிந்திகாவை கொன்று விட்டு, அவரது தொலைபேசியுடன் கொழும்பு சென்ற மனோராஜ், இரண்டு நாளில் திரும்பி வந்த போது, வவுனியாவில் ஒருவரிடம் தொலைபேசியை விற்பனை செய்துள்ளார். அவர் இன்னொருவரிற்கு விற்க, இப்படியே பல கை மாறி, இறுதியில் அனுராதபுரத்தில் வெல்டிங் வேலை செய்பவரிடம் இருந்துள்ளது.
தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கை, தடயங்களின் அடிப்படையில் 7ஆம் திகதி அதிகாலை மனோராஜ் கைது செய்யப்பட்டார். கொழும்பில் வசித்த அவர் மிக அரிதாகவே வவுனியா வந்தார். 7ஆம் திகதி காலையிலேயே வவுனியாவில் ஒரு இடத்தில் அவர் மது அருந்திக் கொண்டிருந்த போது, பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்திய போது, ஆரம்பத்தில் பாடிய அதே பல்லவியையே பாட முயன்றார்.
“சேர்… நானும் சஜிந்திகாவும், பிள்ளையும் பஸ்ஸில வந்துகொண்டிருந்த போது, எங்களிற்குள் சண்டை வந்தது. சஜிந்திகா கிளிநொச்சியிலேயே இறங்கி சென்று விட்டார். அவருக்கு அங்கு ஒரு தொடர்பு இருக்க வேண்டும்“ என்றார்.
எனினும், இம்முறை பொலிசாரிடம் போதுமான ஆதாரங்கள் இருந்தன. அதனால் அவர் விரைவிலேயே உண்மையை கக்க வேண்டியிருந்தது.
இதன்படி, 6 வருடங்களாக நீடித்த மர்மத்தின் முடிச்சை வவுனியா பொலிசார் கடந்த வாரம் அவிழ்த்தனர்.