அரசு பணியில் உள்ள தாய்மார்கள் தங்களில் பச்சிளம் குழந்தைகளை பேணி காப்பதற்காக அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. இந்த விடுப்பு ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்றவாறு அதிகரித்து வழங்கப்பட்டுக் கொண்டே வருகிறது. 1980 ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என மகப்பேறு விடுப்பு காலத்தை கடந்த 2011 ஆம் ஆண்டு 6 மாதங்களாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார்.
தொடர்ந்து, 6 மாதகால மகப்பேறு விடுப்பு, 9 மாத காலத்தில் உயர்த்தப்பட்டது என்று 2016 ஆம் ஆண்டில் அவர் சட்டப்பேரவை விதி 110 கீழ் அறிவித்தார். பிரசவத்துக்கு முன்பு மற்றும் பிரசவத்துக்கு பின்பு என எத்தனை மாதங்கள் விடுப்பு எடுக்க வேண்டும் என்று அந்தந்த பெண் ஊழியர்களுக்கு முடிவு செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நித்தியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும். இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது என்ற தேர்தல் அறிகுறியின் வாக்குறுதி 1.7.2021 முதல் செயல்படுத்தப்படும் ”என்று அறிவித்தார். மகளிர் நலன் சார்ந்த திமுக அரசின் இந்த அறிவிப்பை அரசு பெண் ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.
மேலும், பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 இலட்சம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1-4-2022 முதல் வழங்கல் மற்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.



