பெண்களை பாதிக்கும் ‘ஈஸ்ட்ரோஜன்’
மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு சீராக இருக்கும்போது உடல் இயக்கமும் சீராக இருக்கும். ஹார்மோன்கள் சமநிலை இன்றி காணப்படும்போது பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கும். பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் பங்களிப்பு தேவை. அதன் உற்பத்தி சீராக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் உற்பத்தி இயல்பைவிட அதிகரிக்கும்போது பெண்களுக்கு பல்வேறு உடல்நல சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொதுவாக பருவமடைதல் மற்றும் கர்ப்ப காலங்களில் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கும். பின்பு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
மன அழுத்தம், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயநோய், அதிக மருந்துகள் சாப்பிடுவது போன்ற ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம். உடல் பருமன் அதிகரிப்பதும், குறிப்பாக இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதும் ஈஸ்ட்ரோஜன் அளவு கூடியிருப்பதற்கான அறிகுறியாகும்.
உடற்பயிற்சி செய்தாலும், உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாலும் உடல் எடை குறையாமல் இருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவு சீராக இருக்கிறதா? என்று பரிசோதனை செய்ய வேண்டும். நாள்பட்ட தலைவலி, ஒற்றை தலைவலி போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மாதவிடாய் கோளாறு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஈஸ்ட்ரோஜனுக்கும் பங்கு உள்ளது.
மாதவிடாய் திடீரென்று ஒழுங்கற்ற முறையில் இருந்தாலோ, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் இருந்தாலோ அதற்கு ஈஸ்ட்ரோஜன் அளவு காரணமாக இருக்கலாம். நினைவாற்றலுக்கும் ஈஸ்ட்ரோஜனுக்கும் தொடர்பு உள்ளது. பெண்களின் உடல் நலனில் ஈஸ்ட்ரோஜனின் பங்களிப்பு இன்றியமையாததாக இருப்பதால், அதன் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.