ஆபாச பட வழக்கில் நடிகை கெஹனா வசிஸ்த்தின் முன்ஜாமீன் மனுவை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ் குந்த்ரா இளம் பெண்களை வெப்சீரியலில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலி மூலம் வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் அவரது கூட்டாளியான ரியான் தோர்பே உள்ளிட்டவர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை கெஹனா வசிஸ்த் கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி கடந்த வாரம் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு செசன்சு நீதிமன்ற நீதிபதி சோனாலி அகர்வால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
இதுகுறித்து நீதிபதி கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட நடிகையின் மீது முதல் தகவல் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் தீவிர தன்மையுடையவை, இவர் பாதிக்கப்பட்ட பெண்களை முத்த காட்சிகள் மற்றும் பாலியல் காட்சிகளில் நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். இத்தகைய குற்றச்சாட்டுகளையும், சூழ்நிலைகளையும் பார்க்கும்போது இடைக்கால ஜாமீன் வழங்க இது பொருத்தமான வழக்கு அல்ல’ என்றார்.
இதே வழக்கில் மாடல் அழகியான ஷெர்லின் சோப்ராவின் முன்ஜாமீன் மனு சமீபத்தில் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.